த.வி.கூ, மு.கா, சுயேச்சை வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 8ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இரு உள்ளூராட்சிச் சபைகளுக்குமான வேட்புமனுத் தாக்கல் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்ததுடன் சுயேச்சைக் குழுக்களுக்கான சின்னங்களும் நேற்று வழங்கப்பட்டதாக யாழ், வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்தனர்.
யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைகளுக்காக ஏழு அரசியல் கட்சிகளும் ஐந்து சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இதேவேளை யாழ். மாநகர சபைக்கான வேட்பு மனுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினதும், சுயேச்சைக் குழுவொன்றினதும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வவுனியா ந. சபைக்கான வேட்பு மனுவில் தமிழர் விடுதலைக் கூட்டணியினது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க யாழ். மாநகர சபைத் தேர்தலுக்காக நான்கு அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. சுயேட்சைக் குழுக்கள் இரண்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதுடன் மற்றுமொரு சுயேச்சைக் குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளராக அதன் தலைவர் வீ. ஆனந்தசங்கரி வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளதுடன் சுயேட்சைக் குழு இலக்கம் ஒன்றிற்கு கப்பல் சின்னமும் இரண்டாம் குழுவிற்குப் பூட்டுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாநகர சபைக்கு 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வவுனியா நகர சபைக்கு 11 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக ஆறு அரசியல் கட்சிகள் மற்றும் 03 சுயேட்சைக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 150 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்புமனு வவுனியாவில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகளுடன் மூன்று சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ததாக வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி தெரிவித்தார்.
கடந்த ஜூன் 18ம் திகதி யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது முதல், பல சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்த போதும் ஐந்து சுயேச்சைக் குழுக்களே வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தன.
வவுனியா நகர சபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி போட்டியிடுகின்றது. வவுனியா நகர சபையின் முன்னாள் தலைவர் ரி. லிங்கநாதன் இக்கட்சியில் போட்டியிடுகின்றார். கட்சியின் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன், செயலாளர் எஸ். சதானந்தம் லிங்கநாதன் ஆகியோர் நேற்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
தர்மலிங்கம் யோகராசா, கிட்டு நாகலிங்கம், சுப்பையா ஜெகதீஸ்வரன், சிவலிங்கம் ரவீந்திரன், சுவாம்பிள்ளை தேவகிங்சிலி ராஜேஸ்வரன், கந்தர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், கந்தசாமி சண்முகதாசன், திருமதி நகுலேஸ்வரம்பிள்ளை சோதிமதி, சுந்தரம் குமாரசாமி, சிவபதி ரூசாந்த், கந்தசாமி பார்த்தீபன், ஆரோக்கியதாஸ் தர்ஷன், விஜயகுமார் நோயல் நிரோஷன், கபிலஸ்சரின் நிரோஷன், துரைராசா சுகந்தராஜன் ஆகியோர் இக்கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதன் காரணம்; ஏற்கனவே கடந்த 14ம் திகதிக்குள் தேர்தல் முகவர்களை நியமிக்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் கோரியிருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி 16ம் திகதியே தமது முகவரை நியமித்தது. எனினும் இக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என தேர்தல் ஆணையாளர் 16ம் திகதியே அறிவித்த நிலையில் இக்கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று முன்தினம் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்த போதும் வேட்பு மனுத் தாக்கல் முடிவுற்று நேற்றைய தினம் ஆட்சேபனைகள் முன்வைக்கும் வேளையில் வேட்பாளரின் வயது வித்தியாசம் காரணமாக அம்மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply