பொப் இசை பாடகர் மைக்கல் ஜக்சன் காலமானார்

பொப் இசை உலகின் ‘சூப்பர் ஸ்டார்’ மைக்கல் ஜாக்ஸன் இன்று அதிகாலை 2.26 (அமெரிக்க நேரம்) மணியளவில் லொஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 50. அவரது மரணத்தைப் பொலிஸாரும், ஜாக்ஸன் குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். தனது இனிய இசையால் உலகையே ஆட்டிப் படைத்தவர் மைக்கல் ஜாக்ஸன். 1958இல் அமெரிக்காவின் இந்தியானாவில் இவர் பிறந்தார். தனது 9 வயதிலேயே இசைத்துறையில் கால் பதித்த ஜாக்ஸன், வெற்றிகரமான பாப் பாடகராக மேடைகளைக் கலக்க ஆரம்பித்தார்.

‘தி ஜாக்ஸன் 5’ எனும் பெயரில் தனி இசைக் குழுவைத் தொடங்கிய ஜாக்ஸன், 1970இல் அந்தக் குழுவின் ‘சூப்பர் ஸ்டாரா’கவும், உலக பொப் இசையின் மிகச் சிறந்த பாடகராகவும் திகழ்ந்தார். அப்போது அவருக்கு வயது 12 மட்டுமே. 1972ஆம் ஆண்டு ‘பென்’ எனும் பெயரில் தனது தனி ஆல்பத்தை வெளியிட்டார். 6 வருடங்களுக்குப் பின் தனது முதல் திரைப்படமான ‘தி விஸ்’ ஸில் நடித்தார்.

சரித்திரம் படைத்த இசை ஆல்பங்கள்

பின்னர்தான் தனது நண்பர் ஜோனுடன் இணைந்தார். 1979இல் ‘ஆஃப் தி வால்’ மற்றும் 1982இல் ‘த்ரில்லர் ‘ஆகிய ஜாக்ஸனின் இசை ஆல்பங்கள் சரித்திரம் படைத்தன.

‘ஆஃப் தி வால்’ ஆல்பம்தான் ‘டிஸ்கோ’ இசையை உலகெங்கும் பிரபலப்படுத்தியது. 10 மில்லியன் இசைத்தட்டுக்கள் விற்பனையாகின. அன்று உலகையே வாய்பிளக்கச் செய்த சாதனை இது.

‘த்ரில்லரு’க்கு மட்டும் 8 கிராமி விருதுகள் கிடைத்தன. உலக இசையின் சக்கரவர்த்தியாக அறிவிக்கப்பட்டார் மைக்கல் ஜாக்ஸன். இனம், மொழி, நாடு என்ற எல்லைகளைக் கடந்து உலகமே அவரது இசைக்காக உருகியது.

‘த்ரில்லர்’ ஆல்பம் மட்டுமே 41 மில்லியன் விற்றுத் தீர்ந்தன. இன்றும் பொப் இசையில் அதிகம் விற்பனையாகும் ஆல்பங்களில் ஒன்றாகவே ‘த்ரில்லர்’ திகழ்கிறது. இது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்திலும் பதியப்பட்டது.

இசை உலகின் புதிய விடியல்

இசையிலும் கூட நிறவெறி கொண்டிருந்த மேற்குலக நாடுகளில் ஜாக்ஸனின் வருகை ஒரு புதிய விடியலாகத் திகழ்ந்தது. வேறு வழியே இல்லாமல் வெள்ளையர்கள், ஜாக்ஸனைக் கொண்டாடும் அளவுக்கு, இசையைத் தனது வசப்படுத்திக் கொண்டிருந்தார் ஜாக்ஸன்.

பணம், வியாபாரம் இரண்டிலும் வெல்பவருக்கே உலகம் சொந்தம்… நிறமும் இனமும் ஒரு பிரச்சினையில்லை என்பதை அவரது முன்னேற்றம் உலகுக்கு எடுத்துக் காட்டியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் புதிய தன்னம்பிக்கை தருவதாகவும் அது அமைந்தது.

1992ஆம் ஆண்டு ‘ஹீல் த வேர்ல்ட்’ எனும் அறக்கட்டளையைத் தொடங்கினார் மைக்கல் ஜாக்ஸன். இந்த அமைப்பு மூலம், உடலால், மனதால், நிறவெறியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளைச் செய்வதாக அறிவித்தார்.

ஆதரவற்ற பல சிறுவர்களை இந்த அமைப்பின் மூலம் பராமரிப்பதற்காக அமெரிக்காவில் ‘நெவர்லாண்ட்’ எனும் பெரிய பண்ணை இல்லத்தை வாங்கினார். அங்கேயே இந்த சிறுவர்களுடன் பொழுதைக் கழித்தார்.

பாலியல் குறித்த புகார்கள்

இங்குதான் வந்தது வம்பு. சிறுவர்களை அவர் பாலியல் தொந்தரவு செய்வதாக அவர் மீது புகார்கள் எழுந்தன, வழக்குகள் தொடுக்கப்பட்டன, நீதிமன்றுக்கு வெளியே ஒப்புதல்கள் நடந்தன. இந்த சிக்கல்களில் சிக்கித் தவித்த ஜாக்ஸனால் மீண்டும் ஒரு இசை ஆல்பத்தைத் தர முடியாமல் போனது.

ஆனாலும் கடைசி வரை பொப் உலகின் மன்னனாகவே அவர் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

1994இல் எல்விஸ் பிரஸ்லேயின் மகள் லிசா மேரியைத் திருமணம் செய்து கொண்டு, தன்மீதான ‘சிறுவர் பாலியல் தொந்தரவு’ புகார்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முயன்றார். ஆனால் அந்தத் திருமணமும் இரண்டே ஆண்டுகள்தான் நீடித்தது.

லிசா மேரியை விவாகரத்து செய்த கையோடு 1996இல் டெபி ரோவைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகளும் பிறந்தனர். 1999 வரைதான் இந்தத் திருமண உறவும் நீடித்தது.

குழந்தைகளின் பெயரிலும் புதுமை

பின்னர் வேறொரு பெண் மூலம் மூன்றாவது குழந்தையும் பிறந்தது அவருக்கு. மூவருமே ஆண் குழந்தைகள். மைக்கல் பிரின்ஸ், மைக்கல் பிரின்ஸ் 1, மைக்கல் பிரின்ஸ் 2 என்றுதான் தன் குழந்தைகளுக்கு அவர் பெயரிட்டிருந்தார்.

2005ஆம் ஆண்டு அனைத்து பாலியல் புகார் வழக்குகளிலிருந்தும் நீதிமன்றம் மைக்கல் ஜாக்ஸனை விடுவித்தது.

மீண்டும் ஒரு சாதனையைப் படைக்க ஆர்வமாக இருந்த அவர், எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி முதல், லண்டன், பிரிட்டனின் குறிப்பிட்ட சில நகரங்களில் 50 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதற்காக லொஸ் ஏஞ்சல்ஸில் தீவிரமான ஒத்திகையும் நடந்து வந்தது.

இந்த நிகழ்ச்சிகள் மூலம் தனது ‘இமேஜை’த் திரும்பப் பெற முடியும், புதிய இசை ஆல்பத்தை உருவாக்க முடியும் என்று பலமான நம்பிக்கை கொண்டிருந்தார்.

இறுதிவரை நடக்காது போன ‘இறுதித் திரை’

‘இறுதித் திரை’ எனும் பெயரில் நடக்கவிருந்த இந்த இசை நிகழ்ச்சி இறுதிவரை நடக்காமலே போனது.

ஜாக்ஸன் உடல் நிலை குறித்த வதந்திகள் பல ஆண்டு காலமாகவே இருந்து வருகின்றன. கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவரான அவர் தன் உடல் முழுவதையுமே தொடர் ‘கொஸ்மெடிக் சர்ஜரி’ மூலம் சிவப்பாக மாற்றிக் கொண்டார். முகத்தில் மட்டும் பல முறை ‘கொஸ்மெடிக்’ சிகிச்சை நடத்தப்பட்டது. இதனால் அவரது முகம் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உரு மாறத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த ‘கொஸ்மெடிக்’ சிகிச்சைகளே அவருக்கு தோல் புற்றுநோய் வரவழைத்துவிட்டது என்றும் கூறப்பட்டது.

மருத்துவ பரிசோதனைக்காக அவரது உடல் லொஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

“ஜாக்ஸனின் மரணம் இயற்கையானதுதான். என்றாலும், அதை உடனடியாக உறுதிப்படுத்த முடியாது. ஜாக்ஸன் போன்ற மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்த ஒருவரது மரணத்தை ஆராயாமல் சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. அதற்காகவே இந்தப் பரிசோதனை” என்று ஜாக்ஸனின் முன்னாள் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply