ஐ.நா. ஆய்வாளர்களும் தடுப்பு : ஈரானில் அணு ஆயுத உற்பத்திக்கு நடவடிக்கை – யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க புதிய சட்டம்
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக ஒபாமா பதவி வகித்தபோது 2015-ம் ஆண்டு, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் செய்து கொண்டது.
ஆனால் இந்த ஒப்பந்தம் அமெரிக்க நலன்களுக்கு எதிரானது என டிரம்ப் கருதி, 2018-ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக்கொண்டார்.
மேலும் ஈரான் மீது பொருளாதார தடை விதித்தும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது.
ஆனால் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக அடுத்த மாதம் 20-ந் தேதி பதவி ஏற்க உள்ள ஜோ பைடன், டிரம்ப் நடவடிக்கைக்கு மாறான ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.
அதாவது ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணையும், அந்த ஒப்பந்தத்தை கடுமையாக ஈரான் பின்பற்றினால் அதன் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
இந்தநிலையில், ஈரான் மீதான பொருளாதார தடை 2 மாதங்களில் விலக்கிக்கொள்ளப்படாவிட்டால், அணுசக்தி ஒப்பந்தத்தில் கூறப்பட்ட 3.67 சதவீத அளவைத்தாண்டி, 20 சதவீதம் யுரேனியத்தை செறிவூட்டுவதற்கு வகை செய்யும் சட்ட மசோதா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது, ஐ.நா. ஆய்வாளர்கள், ஈரான் அணுசக்தி தளங்களை பார்வையிடுவதையும் தடை செய்கிறது.
ஈரான் அணு விஞ்ஞானி மோசென் பக்ரிசாதே, கடந்த வெள்ளிக்கிழமையன்று டெக்ரானுக்கு வெளியே காரில் சென்று கொண்டிருந்தபோது மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் இஸ்ரேல் கைவரிசையை ஈரான் சந்தேகிக்கிறது. இந்த சூழலில் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க ஈரான் நாடாளுமன்றம் சட்டம் இயற்றி இருப்பது, அணு ஆயுத உற்பத்திக்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்துவதை எதிர்ப்பதாக ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கூறி உள்ளார். இது நாட்டின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்த புதிய சட்டத்தின்படி, ஈரான் அணுஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் ஐரோப்பிய யூனியன் சார்பில் கையெழுத்து போட்டவர்கள், ஈரான் மீதான பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீத அளவுக்கு ஈரான் அதிகரித்து விடும். அத்துடன் யுரேனிய செறிவூட்டும் மேம்பட்ட மையங்களையும் ஈரான் நிறுவும். மேலும், ஈரான் அணுசக்தி தளங்களை ஐ.நா. ஆய்வாளர்கள் பார்வையிட வர முடியாது. இது சர்வதேச அளவில் பதற்றங்களுக்கு வழிவகுத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply