அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை : ஜோ பைடன் உறுதி
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் இருந்து மீளமுடியாமல் திணறி வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா வைரசின் 2-வது அலை அமெரிக்காவில் ஜெட் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது.
தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கு அதிகமாகவும், உயிரிழப்பு 2 ஆயிரத்துக்கு மேலும் இருந்து வருகிறது. கொரோனா பரவும் அதேவேகத்தில் அதை ஒழிப்பதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியும், மார்டானா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியும் மனிதர்களிடம் இறுதிகட்ட பரிசோதனையை நிறைவு செய்துள்ளன.
இதில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 95 சதவீதமும் மார்டானா நிறுவனத்தின் தடுப்பூசி 100 சதவீதமும் செயல்திறன்மிக்கது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 தடுப்பூசிகளும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தில் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் அமெரிக்கர்களை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்த மாட்டேன் என ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறியதாவது:- அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதனால் தடுப்பூசியை போட்டு கொள்ளுமாறு மக்களை கட்டாயபடுத்த மாட்டேன். தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு குறித்த அம்சங்களை வெளிக்காட்ட பொதுவெளியில் தடுப்பூசி போட தயாராக இருக்கிறேன்.
ஒரு ஜனாதிபதியாக எனது அதிகாரத்தில் உள்ள எல்லாவற்றையும் செய்வேன், மக்களை சரியானதை செய்ய ஊக்குவிப்பேன். அவர்கள் அதைச் செய்யும்போது, அது முக்கியமானது என்பது அவர்களுக்கு தெரியும்.
எனது பதவியேற்பு விழாவில் தொடக்க உரையில் 100 நாட்கள் முக கவசம் அணியுமாறு மக்களிடம் கேட்கப் போகிறேன். ஏனெனில் இது தண்டனையும் அல்ல. அரசியல் பிரச்சினையும் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply