கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவான 2 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு: அமீரக வானியல் ஆய்வு மையம்

அமீரக வானியல் ஆய்வு மையத்தில் புதிய கிரகங்கள் கண்டுபிடிப்புகள் குறித்த விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் புதிய கிரகங்களை கண்டுபிடித்த அமீரக வானியல் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி குழுவின் தலைமை விஞ்ஞானி நிசார் சலாம் கூறியதாவது:-

சூரிய மண்டலத்திற்கு வெளியே ஜி டைப் வகையிலான நட்சத்திரத்தை சுற்றி ‘ஹெச்.டி 63433பி’ மற்றும் ‘ஹெச்.டி 63433சி’ என்ற புதிய 2 கிரகங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகங்கள் சூரிய குடும்பத்திற்கு வெளியே பல 100 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதன் ஆராய்ச்சிக்காக நாசா கடந்த 2018-ம் ஆண்டில் விண்ணில் செலுத்திய டிஇஎஸ்எஸ் என்ற வெளிகிரகங்களை ஆய்வு செய்யும் செயற்கைகோள் பயன்படுத்தப்பட்டது. அமீரக வானியல் ஆய்வு மையத்தின் சார்பில் அந்த செயற்கைகோளில் இருந்து சூரிய மண்டலத்திற்கு வெளியில் உள்ள கிரகங்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதன் முடிவில் நட்சத்திரத்தை மையமாக கொண்டு அந்த 2 கிரகங்கள் மட்டும் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரத்தை பூமியில் இருந்து சாதாரணமாக பார்க்க முடியாது. இது பூமியில் இருந்து 73 ஒளி ஆண்டுகள் (ஒளி ஆண்டு என்பது ஒரு ஆண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவு) தொலைவில் உள்ளது. இதனை அந்த கிரகங்கள் ஒருமுறை சுற்றி வர 20½ மணி நேரமாகும்.

இந்த கிரகங்கள் முழுக்க நெப்டியூன் கிரகம் போன்று வாயுவால் நிரம்பியுள்ளது. மேலும் இந்த கிரகங்களில் வளிமண்டல அடுக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அளவில் பூமியை விட 7½ மடங்கு அந்த கிரகங்கள் பெரிதானதாகும். ஹெச்.டி 63433பி கிரகம் நீலம் கலந்த பச்சை நிறத்திலும், ஹெச்.டி 63433சி என்ற கிரகம் சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது.

புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு அமெரிக்க விண்வெளி ஏஜென்சியான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு தற்போது அமெரிக்க விண்வெளி சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிய கிரகங்கள் மூலம் சிறிய கிரகங்கள் எவ்வாறு வளர்ச்சியடைந்து வளிமண்டலத்தை பெறுகின்றன? கிரகங்களின் பரிணாம வளர்ச்சி எப்படி நடைபெறுகிறது? போன்ற ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

இந்த முயற்சிக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள 25-க்கும் மேற்பட்ட வானியல் ஆய்வு மையங்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளன. அமீரகத்தின் 49-வது தேசிய தினம் கொண்டாடும் ஆண்டில் இந்த கண்டுபிடிப்பு பெருமையளிப்பதாக உள்ளது. இந்த புதிய கிரகங்களின் கண்டுபிடிப்பு சாதனையை அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான், அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் விண்வெளித்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் அனைத்து அரசுத்துறைகள், அதிகாரிகளுக்கும் அர்ப்பணிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அந்த மையத்தின் ஊடக ஆலோசகர் அப்துல் ரஹ்மான் நகி அல் பஸ்தகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply