சிறந்த நல்லுறவு தொடர கூட்டு முயற்சி தேவை: ஜெய்சங்கர் கருத்துக்கு சீனா பதில்
கிழக்கு லடாக் எல்லை பகுதி கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சீன ராணுவத்தினரை, இந்திய ராணுவம் தடுத்தபோது ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதேபோல் சீன தரப்பிலும் கடும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இரு நாடுகளின் எல்லையில் தங்களது படைகளை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. பதற்றத்தை தணிக்க இரு நாடுகள் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் படைகளை வாபஸ் பெற இரு நாடுகளும் சம்மதித்தன. ஆனால் சீனா தொடர்ந்து படைகளை குறைக்காமல் இருந்து வருகிறது.
இந்தநிலையில் ஆஸ்திரேலிய கொள்கை வகுப்பு அமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் காணொலி காட்சி வாயிலாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான நல்லுறவு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நல்லுறவில் விரிசல் தோன்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லை பகுதியில் அமைதி ஏற்பட்டால் மட்டுமே சீனாவுடன் நல்லுறவு மேம்படும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவும்போது மற்ற துறைகளில் நல்லுறவாக இருப்பது சாத்தியமற்றது.
எல்லைப்பகுதிகளில் அதிக அளவிலான படைகளை குவிப்பதற்கு எதிரான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஆனால் அந்த ஒப்பந்தங்களை சீனா மீறியுள்ளது. ஆயிரக்கணக்கில் ராணுவ வீரர்களை எல்லையில் சீனா குவித்துள்ளது. இதற்கு இதுவரை 5 வெவ்வேறு விளக்கங்களை சீனா கொடுத்திருக்கிறது. இதுவே இரு நாடுகளின் நல்லுறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதற்கு காரணம் ஆகும். இரு நாடுகள் இடையேயான நல்லுறவை மீட்டெடுப்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கும். தொடர்ந்து பேச்சு வார்த்தையில் பிரதிநிதிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பல்வேறு ஒப்பந்தங்கள் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஜெங்சங்கருக்கு பதில் அளிக்கும் வகையில் சீனா ‘‘சிறந்த நல்லுறவு தொடர் கூட்டு முயற்சி தேவை’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறுகையில் ‘‘சீனாவும் இந்தியாவும் அண்டை நாடுகள். உலகில் மிகப்பெரிய வளர்ந்து வரும் மார்க்கெட்டை பெற்றுள்ளன. இரண்டு நாடுகள் மற்றும் மக்களின் அடிப்படை வளர்ச்சிக்கு சிறந்த நட்புறவை பேனுவது உதவியாக இருக்கும். இரண்டு பக்கத்திலும் இருந்தும் இணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
சரியோ? தவறோ? சீனா-இந்தியா எல்லையில் என்ன நடந்தது என்பது மிகவும் தெளிவாக இருக்கிறது. இந்திய தரப்பிலும் வெளிப்படைத்தன்மையுடன் கூறும் பொறுப்புள்ளது. பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்சனையை தீர்க்க சீனா உறுதி பூண்டுள்ளது’’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply