தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

கொரோனா பரவலை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்தியாவில் இன்னும் 10 நாட்களில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இதற்காக ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் கோவேக்சின் தடுப்பூசியும் அடுத்தகட்டமாக பயன்பாட்டுக்கு வர உள்ளது.

தமிழகத்தில் முதல்கட்டமாக கோவிஷீல்டு தடுப்பூசி மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள், மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் என 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட பட்டியல் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை ஏற்கனவே ஆந்திரா, பஞ்சாப், அசாம், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 28, 29 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை ஒரே நேரத்தில் நடத்தி பார்க்கப்பட்டது.

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சாந்தோம் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஈக்காட்டுதாங்கல் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நேமம் ஆரம்ப சுகாதார நிலையம், திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மருத்துவமனை, குன்னூர் அரசு மருத்துவமனை, நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும், கோவை மாவட்டத்தில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பி.எஸ்.ஜி. மருத்துவமனை, சூலூர் அரசு மருத்துவமனை, எஸ்.எல்.எம். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், பூலுவப்பட்டி சமுதாய நல மையம் ஆகிய இடங்களிலும் ஒத்திகை நடந்தது.

இந்த ஒத்திகையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், இட வசதிகள் ஆகியவை எவ்வாறு உள்ளன என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேர்தல் சமயத்தில் கியூவில் வந்து முறைப்படி பதிவு செய்து ஓட்டு போடுவதுபோல் தடுப்பூசி போட வருபவர்களுக்கும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

தடுப்பூசி ஒத்திகையில் கிடைத்த அனுபவங்களை ஒவ்வொரு மாநில அரசும் மத்திய சுகாதாரதுறைக்கு விரிவாக அறிக்கை அளித்து இருந்தது.

தற்போது இந்த ஒத்திகையில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் வருகிற 13-ந்தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணி ‘கோ-வின்’ இணையதளம் மூலம் ஒருங்கிணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி ஒவ்வொரு மாநிலங்களிலும் தடுப்பூசி அனுப்பப்படும் போது அதை சேமித்து வைக்க தேவையான கிடங்குகளையும் குளிர்சாதன வசதியுடன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் மருந்து சேவை கழகம் மூலம் சேமிப்பு கிடங்குகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் அண்ணா நகர், எழும்பூர், டி.எம்.எஸ். ஆகிய இடங்களில் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இது தவிர மத்திய அரசின் மருந்து சேமிப்பு கிடங்கு பெரியமேடு எவரெஸ்ட் அருகே உள்ளது. இங்கிருந்து தான் தென்மண்டலங்களுக்கு தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்படும்.

இந்த மருந்து கிடங்குகளை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட இருப்பவர்களின் பெயர் பட்டியல் அனைத்தும் தயார்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி வந்ததும் தினமும் ஒவ்வொரு மையத்திலும் 100 பேருக்கு தடுப்பூசி போட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படும். இதில் 2 மணிநேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி செலுத்த நேரம் சரியாக இருக்குமா? என்று கடந்த 2-ந்தேதி ஒத்திகை நடத்தி பார்த்தோம். இப்போது அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 8-ந்தேதி முதல் தடுப்பூசி ஒத்திகை நடத்தி பார்க்கப்படும்.

தமிழகத்தில் 51 இடங்களில் 2.5 கோடி தடுப்பூசிகள் சேமித்து வைப்பதற்கான இடவசதிகள் உள்ளன. இதில் மாநில அரசின் சார்பில் 1.17 கோடி மருந்துகளை இருப்பு வைக்க வசதிகள் உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் தற்போது 2-ம் கட்டமாக 2,880 இடங்களில் தடுப்பூசியை சேமித்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தடுப்பூசியை அனுப்பி வைத்ததும் அதை சென்னையில் இருந்து 2,880 இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகளுக்கு அவற்றை அனுப்பி பாதுகாப்பாக இருப்பில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து ஒவ்வொரு மையங்களுக்கும் தடுப்பூசி அனுப்பி வைக்கப்படும்.

இதற்காக தடுப்பூசி போடும் மையங்களை எந்த இடத்தில் அமைக்கலாம் என்பதை கண்டறிய மருத்துவ குழுவை அமைக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள்.

தடுப்பூசி போடும் மையங்களை மினிகிளினிக் அல்லது ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது தனி கட்டிடங்களில் உருவாக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அந்த இடங்களை பார்வையிட்டு முடிவு செய்யும்.

தடுப்பூசி போடப்படும் கட்டிடம் குறைந்தது 3 அறைகள் கொண்டதாக விசாலமாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இடம் முடிவு செய்யப்படும்.

மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதிக்கும் போது தமிழகத்திலும் ஒரே சமயத்தில் தடுப்பூசி போட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு முதல்கட்டமாக எவ்வளவு தடுப்பூசிகளை தமிழகத்துக்கு தரும் என்று தெரியவில்லை.

டாக்டர்கள், செவிலியர்கள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், வருவாய் துறை, காவல்துறை ஆகியவற்றில் பணியாற்றுபவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இதைத்தொடர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், முதியோர்களுக்கும் தடுப்பூசி போட முன்னுரிமை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply