மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேச பிரசாரம்

Tamil

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலையொட்டி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இன்று காலை பவானியில் தனது பிரசாரத்தை தொடங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது-

நான் இங்கு தான் படித்தேன். பவானி அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 11-ம்வகுப்பு வரை இங்கு தான் படித்தேன். இந்த பவானி நகரம் முழுவதும் சிறுவயதிலே நன்கு தெரிந்த பகுதி. பவானி தொகுதி முழுவதும் எனக்கு நன்றாக தெரியும்.

இந்த பகுதியில் தான் எனது ஊர் இருக்கிறது. ஆக பவானி தொகுதியையும் எடப்பாடி தொகுதியையும் இடையில் பிரிப்பது காவிரி ஆறு ஒன்றுதான். எனவே நன்கு அறிமுகமான ஈரோடு பவானி தொகுதியிலேயே முதன் முதலாக பேசுவதில் எல்லா வல்ல இறைவன் எனக்கு கொடுத்த பாக்கியமாக கருதுகிறேன்.

இவ்வளவு திரளாக எழுச்சி மிகு பிரமாண்டமான தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அதும் இந்த பகுதியில் படித்த ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்றுசொன்னால் அது எந்தளவுக்கு மகிழ்ச்சி இருக்கும் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

ஆகவே இன்றைக்கு முதல்-அமைச்சர் என்பது ஒரு பணி. இங்கு வருகை தந்து அமர்ந்திருக்கிறீர்களே அத்தனை பேரையும் தமிழகத்தின் முதல்-அமைச்சர்களாக நான் பார்க்கிறேன். எனவே நீங்கள் இடுகின்ற கட்டளையை நிறைவேற்றுகின்ற பணிதான் எனது பணி. ஆகவே உங்கள் பகுதியில் வாழ்ந்து மக்களோடு மக்களாக இணைந்து மக்களுடைய எண்ணங்களை முழுமையாக தெரிந்தவர் இந்த தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக இன்றைக்கு பதவி வகித்துள்ளேன் என்று சொன்னால் நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

ஆகவே நமது பகுதியில் என்ன பிரச்சினை இருக்கிறது. அதை எப்படி தீர்ப்பது என்று நன்கு உணர்ந்திருக்கிறேன். இன்று வேளாண் பெருமக்கள் நிறைந்த பகுதி நம்முடைய பவானி சட்டமன்ற தொகுதி.

ஆகவே வேளாண் பெருமக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும். அது எங்களுடைய அரசு இன்று கவனமாக பார்த்து செயலாற்றி கொண்டிருக்கிறது.

வேளாண் பெருமக்கள் என்று சொன்னால் அதற்கு நீர் தேவை. தண்ணீர் இருந்தால் தான் வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியும். வேளாண் பணிகள் இருந்தால் தான் விவசாய தொழிலாளிக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆக இரண்டையும் சரியான முறையில் செய்ய வேண்டும் என்பதற்காகதான் எங்களுடைய அரசு குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து இன்றைக்கு நமது ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதியில் இருக்கின்ற பெரும்பாலான ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக இன்றைக்கு முழுக்க முழுக்க விவசாய பங்களிப்போடு அந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம்.

பல ஆண்டுகாலமாக தூர்வாரப்படாமல் இருந்த ஏரிகள் எல்லாம் இன்றைக்கு தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் பெய்த நீர் முழுவதும் சேமித்து வைத்து இன்று குளம் நிரம்பி வழிவதை இன்றைக்கு பார்க்கிறோம்.

இதனால் கோடை காலத்திலும் தேவையான நீர் கிடைக்கிறது. குடிப்பதற்கு தேவையான நீர் கிடைக்கிறது. ஆகவே வேளாண் பெருமக்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான நீரை பெருக்குவதில் தமிழக அரசு இன்று முன்னுதாரணமாக திகழ்கிறது. அதேபோல் ஓடையின் குறுக்கே, நதியின் குறுக்கே தடுப்பணை கட்டுதல், பவானிசாகரிலிருந்து காலிங்கராயன் வரை தடுப்பணை கட்ட நம்முடைய அரசு திட்டமிட்டுள்ளது. பவானிசாகரில் இருந்து உபரியாக வருகின்ற நீரை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி அந்த பகுதியில் நிலத்தடி நீரை உயர்த்துவதற்காக பிரம்மாண்டமான திட்டத்தை நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

விவசாயிகளுக்கு தேவையான நீர் கொடுப்பது அரசின் நோக்கம். ஆகவே இன்றைக்கு வேளாண் பணி சிறக்க வேண்டும் என்றால் உணவு என்பது முக்கியம். அதேபோல் குடிநீர் என்பது முக்கியம். இரண்டும் ஒரு மனிதனுக்கு மிக அத்தியாவசியம். ஆகவே இந்த அரசு முதல் முன்னுரிமை கொடுத்து இன்று செயலாற்றி கொண்டிருக்கிறோம்.

நீர் மேலாண்மை என்பது மிக மிக முக்கியம் அதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம். அதேபோல நமது பவானி சட்டமன்ற தொகுதியின் பெரும்பாலான பணிகள் மேட்டூர் கிழக்கு கரை பாசன கால்வாய் மூலமாக பாசனம் பெறுகிறது.

மேட்டூர் கிழக்கு கரை கால்வாயில் சீரமைக்க எங்களுடைய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பவானிசாகர் கால்வாயில் 940 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஸ்டாலின் மக்களை கூட்டி மக்கள் பொய் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பே இதைப்போன்று மக்கள் கூட்டத்தை நடத்தினார். அதில் பெறப்பட்ட மனுக்கள் என்னவாயிற்று. மக்களை இதுபோன்று தொடர்ந்து அவர் ஏமாற்றி வருகிறார். தற்போது பெண்களை கூட்டி வாத்தியார் போன்று கூட்டம் நடத்தி வருகிறார். இதில் ஏதாவது பயனுள்ளது பேசி வருகிறாரா? இல்லை. அரசை பற்றியும், அரசு திட்டங்கள் பற்றியும் குறை கூறி வருகிறார். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் குறித்து ஊழல் புகார் தெரிவித்து உள்ளார்.

இதனால் மக்கள் குழம்பி போய் உள்ளனர். இதை தெளிவுபடுத்த வேண்டியது எங்களது பொறுப்பு. அவர் சொன்னது போன்ற டெண்டரே நடைபெறவில்லை. அப்படி இருக்கையில் எப்படி ஊழல் நடைபெறும். எனவே அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருகிறார்.

அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் கிடைக்குமா என்று கனவு காண்கிறார். அது ஒருபோதும் பலிக்காது. அ.தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது.

1.86 லட்சம் கோடி மதிப்பில் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தி.மு.க.வினர் ஈடுபட்டுள்ளனர். அப்போதைய அமைச்சராக இருந்த ராசா இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இதன்மூலம் கலைஞர் டி.வி.க்கு 200 கோடி ரூபாய் கைமாறி உள்ளது.

கருணாநிதி சென்னைக்கு வரும்போது எவ்வளவு சொத்துடன் வந்தார். இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார். கலைஞர் குடும்பத்தினருக்கு மட்டும் 58 சொத்துக்கள் உள்ளது. இது எப்படி வந்தது என்று மக்கள் நீங்களே சிந்தித்து பாருங்கள்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ன நினைத்தார்களோ அதை எனது தலைமையிலான அரசு சிறப்பாக செய்து வருகிறது. தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்கை திறந்து வரலாறு படைத்துள்ளோம்.

நமது ஈரோடு மாவட்டத்தில் 52 அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டு வருகிறது. இதில் 1 எம்.பி.பி.எஸ் டாக்டர், செவிலியர், மருத்துவ உதவியாளர் உள்ளனர்.

இதனால் கிராம மக்கள் எளிதாக சிகிச்சை பெற முடிகிறது. இந்த திட்டத்தையும் மு.க.ஸ்டாலின் குறை கூறுகிறார்.

அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த 313 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

மேலும் 92 மாணவர்கள் பல் மருத்துவமனையில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். நான் அரசு பள்ளியில் படித்ததால் அரசு பள்ளி மாணவர்கள் படும் கஷ்டம் எனக்கு தெரியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply