பொருளாதார மேம்பாட்டிற்கு 31½ கோடி திர்ஹாம் நிவாரண நிதி தொகுப்பு : துபாய் பட்டத்து இளவரசர் அறிவிப்பு
துபாய் நிர்வாக கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி துபாயில் உள்ள வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக பொருளாதார நிதி தொகுப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது.
முதற் கட்டமாக கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி 150 கோடி திர்ஹாம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2-வது கட்டமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி 330 கோடி திர்ஹாமும், 3-வதாக கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி 150 கோடி திர்ஹாமும், 4-வதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 50 கோடி திர்ஹாமும் நிவாரண நிதி தொகுப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
இதில் தற்போது 5-வது கட்டமாக 31½ கோடி திர்ஹாம் நிதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் வழங்கப்பட்டுள்ள விலக்குகள் மற்றும் சலுகைகள் பின்வருமாறு:-
ஏற்கனவே அளிக்கப்பட்டு இருந்த நிவாரண நிதி தொகுப்பின்படி ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் வரை துபாய் மாநகராட்சியின் விற்பனை மதிப்பு கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு இருந்தது. இதில் தற்போது அந்த சலுகை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஓட்டல், உணவகங்களுக்கான விற்பனை மதிப்பு கட்டணம் 50 சதவீதம் (3.5 சதவீத மொத்த தொகைக்கு சமமானது) திருப்பி அளிக்கப்படும். அதேபோல் சுற்றுலா நிறுவனங்களுக்கான ‘சுற்றுலா திர்ஹாம்’ கட்டணத்தில் பாதி திருப்பி தரப்படும்.
சுற்றுலாத்துறை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் துறைகள் பொறுத்தவரையில் கண்காட்சிகள், மாநாடுகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் ஒத்திவைப்பு மற்றும் நிகழ்ச்சியை ரத்து செய்வதற்கான கட்டணங்களில் இருந்து தொடர்ந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சலுகை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் டிக்கெட் கட்டணத்திற்கான விண்ணப்பித்தல், அந்த நிகழ்ச்சிக்கான அனுமதி வழங்குதல், பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகளுக்கான கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது நீடிக்கும்.
வர்த்தக உரிமங்களை புதுப்பிக்க குத்தகை ஒப்பந்தங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற முறை உள்ளது. ஆனால் அவ்வாறு ஒப்பந்தங்களை புதுப்பிக்காமல் தங்கள் வர்த்தக உரிமங்களை நிறுவனங்கள் புதுப்பித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய உரிமங்கள் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்கு மாதாந்திரம் செலுத்தும் அடிப்படையில் விதிக்கப்படும் அரசு கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதில் 25 சதவீதம் செலுத்த வேண்டும் என்ற நிர்ணயிக்கப்பட்ட முதல் கட்டணத்தை செலுத்தும் முறை ரத்து செய்யப்படுகிறது. மேலும் இதில் குறைந்தபட்ச தவணை தொகை எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துபாயில் அறிவுத்திறன் நிதி அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் செயல்படும் நர்சரி பள்ளிக்கூட நிர்வாகங்களுக்கு வாடகை தொகையில் 50 சதவீதம் குறைக்கப்படுகிறது.
இதுவரை அளிக்கப்பட்ட 5 பொருளாதார நிவாரண நிதி தொகுப்புகளின் மதிப்பு 710 கோடி திர்ஹாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிவாரண நிதி தொகுப்பானது இந்த ஜனவரி மாதம் முதல் வரும் ஜூன் மாதம் வரை அளிக்கப்படும். இதுவரை துபாயில் மொத்தம் 710 கோடி திர்ஹாம் நிவாரண நிதி தொகுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த 5-வது பொருளாதார நிவாரண நிதி தொகுப்பை வெளியிட்ட துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
துபாயில் வெளியிடப்பட்டுள்ள புதிய நிவாரண நிதி தொகுப்பில் விலக்குகள் மற்றும் சலுகைகள் உள்ளது. பொருளாதார செயல்பாடுகளில் அனைவரும் பயன்பெறும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான உறுதியான நட்புறவு நீடிக்க இது உதவும். எதிர்கால வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள ஒன்றிணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply