முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு: தமிழக தலைவர்கள் கண்டனம்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண்-நினைவு முற்றத்தை இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்து விட்டு சிங்கள அரசின் ஏவுதலின் பேரில் ராணுவத்தினர் இடித்துத் தகர்த்துள்ளனர். இது கொடுமையிலும் கொடுமை ஆகும்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று திரும்பிய 48 மணி நேரத்திற்குள் இந்த அராஜகத்தை சிங்கள அரசு செய்துள்ளது. இந்திய அரசு, சிங்கள அரசுடன் கொஞ்சிக் குலாவுவதால் நாம் என்ன செய்தாலும் உலகத்தில் கேள்வி கேட்பார் யார்? என்ற மமதையும், திமிரும் தலைக்கு ஏறி உள்ளது.

சுதந்திரத் தமிழ் ஈழத்திற்குத் தீர்மானம் போட்ட அ.தி.மு.க. அரசு என்ன செய்யப் போகிறது?

யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் நினைவு முற்றமும் நினைவுத் தூணும் அமைக்கப்பட வேண்டும். சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக முத்துக்குமார் உள்ளிட்ட 19 வீரத் தமிழர்கள் தீக்குளித்து மாண்டனரே, அந்த நெருப்பு நம்முடைய நெஞ்சிலே பற்றட்டும்.

இலங்கைத் தீவில் கோத்தபய ராஜபக்சேவின் அரசு, அனைத்துலக நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். நடைபெற்ற அக்கிரமத்தைக் கண்டித்து சிங்கள அரசுக்கு இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

நெஞ்சை பதற வைக்கும் இந்தக் கொடிய சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் வருகிற 11-ந் தேதி காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெறும். தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், கழகக் கண்மணிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில், “யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ளனர்.

சிங்கள இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விடுதலை சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் சிங்கள ஆதிக்கத்தைத் தகர்ப்போம். தமிழர் அடையாளம் காப்போம்” என்று பதிவிட் டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈழப்பேரழிவைச் சந்தித்து ஆறா ரணத்தையும், கொடும் பேரிழப்பையும் சந்தித்து நிற்கும் தமிழர்களைச் சீண்டும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது. இனப் படுகொலை செய்த ஆட்சியாளர்களின் தொடர் இன அழிப்பின் நடவடிக்கையாகத்தான் இதைக் கருதவேண்டியிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்திருப்பது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது. ஈழத்தில் 2 லட்சம் தமிழர்களைக் கொன்றுமுடித்து, அந்த இழப்புக்கு நீண்டகாலமாய் நீதிகேட்டு உலகத்தமிழர்கள் உள்ளம் குமுறிக் கொண்டிருக் கையில், வெந்தப் புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல நிகழ்த்தப்பட்டிருக்கும் இக்கோரச்சம்பவம் ஏற்றுக் கொள்ளவே முடியாத வன்மையான கண்டனத்திற்குரியது.

சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கீழ் இருக்கிற வரை எத்தனை ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு இதுதான் நிலை என்பதை இச்சம்பவத்தின் வாயிலாக உலகத்தார் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் தங்கள் பண்டிகையைக் கொண்டாடும் மாதமான தை மாதத்தில் ராஜபக்சே அரசு தமிழர்களுக்குப் பொங்கல் பரிசாக இந்த இடிப்பை நிகழ்த்தியிருக்கிறது.

ஈழத்தமிழ் மக்களை அச்சுறுத்தி அம்மண்ணில் இருந்த ஒற்றை நினைவிடத்தையும் அழித்து முடித்ததோ, ஒருநாள் அதே மண்ணைத் தமிழர்கள் நாங்கள் ஆளுகை செய்வோம். எங்கள் தாயகத்தை மீள்கட்டுமானம் செய்வோம். அன்றைக்கு எங்களது வெற்றிச்சின்னத்தை இதே யாழ் பல்கலைக்கழகத்தில் கட்டியெழுப்புவோம். எங்கள் நாடும், எங்கள் மண்ணும் கைவரப்பெறும் நாள் வரை ஓயோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply