விடுதலைப் புலிகளுக்கு இனி இடமில்லை: இராணுவம்

இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படாது என இராணுவத்தினர் சூளுரைத்துள்ளனர்.  “விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகி நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்தார்.

வெளிநாட்டில் மறைந்திருக்கும் குமரன் பத்மநாதன் உள்ளிட்ட பலர் விடுதலைப் புலிகள் எனக் கூறிக்கொண்டு பலர் செயற்படுவதாகக் குறிப்பிட்ட இராணுவப் பேச்சாளர்,
“இவ்வாறானவர்கள் வெளியிடும் அறிக்கைகளை நாங்கள் கவனத்தில் எடுக்கப்போவதில்லை. எமது பணியை நாம் சிறப்பாகச் செய்துள்ளோம். நாட்டைத் தொடர்ந்தும் பாதுகாப்போம், விடுதலைப் புலிகளுக்கு இனிமேலும் இடமில்லை” என்றார் அவர்.

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறைகளைக் கைவிட்டுள்ளபோதும், அரசியல் ரீதியான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கவிருப்பதாக அந்த அமைப்பின் வெளிவிவகாரப் பிரிவுத் தலைவர் எனக் கூறப்படும் செல்வராசா பத்மநாதன் அறிவித்துள்ளார். தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளை அரசியல் ரீதியாக வெற்றிபெறுவதற்கான புதிய பாதை தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், அதனூடாகப் பயணித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுமெனவும் அவர் அண்மையில் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், விடுதலைப் புலிகளின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது வெறும் கற்பனையே என அரசாங்கம் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply