மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கியது
நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டது. அந்தத் தேர்தலின்போது மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதனையடுத்து, டார்ச் லைட் சின்னத்தை விளம்பரப்படுத்தும் பணியில் கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் தீவிரமாக இறங்கினர். இதனைத்தொடர்ந்து டார்ச் லைட் சின்னம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னமாக மக்களிடம் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு, தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.மக்கள் கட்சிக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டது.
இதனால் கமல் ஹாசன் கடும் அதிருப்தி அடைந்தார். டார்ச் லைட் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்திலும் மனு அளிக்கப்பட்டது.
டார்ச் லைட் சின்னத்தை விட்டுத்தரமாட்டோம் என பிடிவாதமாக இருந்த எம்ஜிஆர் மக்கள் கட்சியின் தலைவர் விஸ்வநாதன், திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு வேறு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சின்னமாக டார்ச் லைட்டை ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
இந்த தகவலை கமல் ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், ‘‘மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்!’’ எனத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply