வடக்கில் கூட்டமைப்பும், முன்னணியும் ஒன்றாக சேர்ந்து பயணம்

வடமாகாண சபைத் தேர்தலில் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய பொதுப்பட்டியலில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசனை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார் என்று தெரியவருகிறது.

வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசிய பரப்பில் இம்முறை மும்முனைப் போட்டி ஏற்படுவதற்கான நிலைமைகள் அதிகம் இருக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய தரப்புகள் தனித்தனியாக களம் இறங்குவதே தற்போதைய நிலைப்பாடாக இருக்கிறது.

இவ்வாறான நிலை கூட்டணி ஆட்சிக்கு பெரும் சவாலாகி விடும் என்றும் சில சமயங்களில் முத்தரப்பிடையே காணப்படும் முரண்பாட்டால் இலங்கை அரசின் பங்காளியாக இருக்கும் ஈபிடிபி மற்றும் அங்கஜன் அணி கூட்டிணைந்து ஆட்சியை கைப்பற்றுவதற்கு வழிவகுத்து விடும் ஆபத்தும் உள்ளது என்று உணரப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டமைப்பு, முன்னணி, கூட்டணி ஆகிய மூன்று தரப்புகளும் ஒன்றிணைந்து கட்சி சார்பான அரசியல் செயற்பாட்டாளர்களை தவிர்த்து துறைசார் நிபுணர்களை களமிறக்குவது தொடர்பில் முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியை சுமந்திரனே முன்னெடுத்திருப்பதாகவும், இதன் முதற்கட்டமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் உத்தியோகப்பற்றற்ற பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் அந்தப் பேச்சு வெற்றி பெற்றதா? அல்லது அடுத்த கட்டத்திற்கு நகர்கிறதா என்பது தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படாத நிலையில், விரைவில் விக்னேஸ்வரன் தரப்புடனும் இது தொடர்பான பேச்சுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply