முல்லை மாவட்டத்தின் நான்கு பகுதிகளில் முதலில் குடியேற்றம்

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான், மாங்குளம், துணுக்காய் மற்றும் பாண்டியன் குளம் ஆகிய பகுதிகளில் முதலில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நேற்று தெரிவித்தார். இதன்படி இப்பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணி படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒட்டுசுட்டானில் 5088 குடும்பங்களும் துணுக்காயில் 3 ஆயிரம் குடும்பங்களும் பாண்டியன்குளம் மாந்தை கிழக்கு பகுதியில் 2255 குடும்பங்களே ஆரம்பத்தில் குடியிருந்ததாகவும் அவர்களை முதலில் குடியமர்த்தத் தேவையான உரிய வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த முதலில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன் படி பாடசாலைகள், கோவில்கள், ஆஸ்பத்திரிகள் அமைத்தல், வீதிகளை திருத்தியமைத்தல் என்பன முதலில் முன்னெடுக்கப்படவுள்ளதோடு இது தொடர்பான நிலவரங்களை நேரில் சென்று மதிப்பிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வீதிகளை திருத்துவதற்கு இது வரை 270 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார். பிரதான வீதிகளை திருத்துவதற்கு 125 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு கமநெகும திட்டத்தின் கீழ் வீதிகளை புனரமைக்க 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி வீதிகள், மாகாண வீதிகள் என்பவற்றை செப்பனிட ரூ. 125 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தவிர கிணறுகள், குளங்கள் என்பனவற்றை துரிதமாக திருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மதிப்பீடுகளையும் முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறினார். நீண்டகால திட்ட அடிப்படையில் நீர்ப்பாசனத் திட்டங்களை புனரமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் மற்றும் சேவை நிலையங்களை திருத்தியமைப்பது குறித்து ஆராய்வதற்காக அப்பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளதாகவும் முல்லைத்தீவு அரச அதிபர் கூறினார். இது தொடர்பாக வவுனியா இராணுவ முகாமில் உயர் மட்டப் பேச்சுவார்த்தையொன்று இன்று (30) நடத்தப்படவுள்ளது. பாதுகாப்புத் தரப்பு அனுமதி கிடைத்தவுடன் முல்லைத்தீவு பகுதிக்கு சென்று நிலைமைகளை மதிப்பீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகும். இந்த திட்ட அறிக்கை எதிர் வரும் 3 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணி, தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சு என்பவற்றுக்கு கையளிக்கப்பட உள்ளன. சகல அரச திணைக்களங்கள், அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள் என்பன முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து தமக்கு விபரங்களை கையளித்து வருவதாகவும் அதனடிப்படையில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அரசாங்கத்துக்கு கையளிக்க உள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply