வணங்காமண் கப்பல் பொருட்களை ஏற்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் உடன்பாடு

புலம்பெயர் தமிழர்களின் உதவிப் பொருட்களை ஏற்றி வந்த வணங்காமண் என்னும் கப்பலில் உள்ள பொருட்களை ஏற்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் உடன்பட்டுள்ளது. இதனையடுத்து, அதனைப் பெற்று இலங்கைக்கு அனுப்பும் பணிகளில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய வெளியுறவு அமைச்சு கேட்டதற்கிணங்க, இந்த விடயம் தொடர்பாக தாம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தை தொடர்பு கொண்டதாகவும், அந்த பொருட்களை ஏற்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஒப்புக்கொண்டதாகவும் இந்திய செஞ்சிலுவை சங்கம் தெரிவித்தது.இதனையடுத்து நிவாரணப் பொருட்களைத் தாம் பெற்று இலங்கைக்கு வேறு ஒரு கப்பலில் அனுப்ப நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இந்திய செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கான நடவடிக்கைகளை சென்னையில் உள்ள தமது அலுவலகம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதற்காக கொல்கத்தாவில் இருந்து கப்பல் வரவழைக்கப்படவுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து வணங்காமண் கப்பல் ஊழியர்கள் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

கப்பல் ஊழியர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“எங்கள் நிவாரணப் பொருட்களை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்திய அரசு மூலம் இந்த பொருட்கள் இலங்கையிடம் வழங்கப்படும். இலங்கை முகாம்களில் வாடும் மக்களுக்கு நிவாரணம் கிடைக்க இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம். ஐரோப்பிய மற்றும் இந்தியா, குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்களின் ஆதரவு மற்றும் ஓய்வறியா உழைப்பின் காரணமாகவே எங்கள் பயணம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது” என்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply