வவுனியா முகாமிலிருந்து வந்த பெண் உட்பட மூவர் கொழும்பில் கைது
வவுனியாவில் உள்ள முகாம்களில் தங்கியிருந்த பின்னர் வெளிநாடு செல்லும் நோக்கில் கொழும்புக்கு வந்து தற்காலிக விடுதியொன்றில் தங்கியிருந்த பெண் உட்பட மூன்று பேர் கொட்டாஞ்சேனைப் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த நிலையிலேயே, அவர்கள் கொழும்புக்கு வந்து மேற்படி தற்காலிக விடுதியில் தங்கியிருந்ததாகப் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள மூவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடனேயே அங்கிருந்து கொழும்புக்கு வந்தள்ளனர் என்றும் அவ்விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் அவர்கள் மூவரும் மேற்படி நலன்புரி முகாமிலிருந்து எவ்வாறு வெளியேறியிருப்பார்கள் என்பது குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கைதுசெய்யப்பட்ட இவர்கள் மூவரும் விடுதலைப்புலிகளின் முன்னணி செயற்பாட்டாளர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த பெரேரா தலைமையிலான பொலிஸ் குழுவினர் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலும் கூறினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply