மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா: கவர்னர் பன்வாரிலால் தேசிய கொடி ஏற்றினார்

72-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா நடைபெறும் இடத்துக்கு காலை 7.52 மணிக்கு வந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து வந்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலாளர் சண்முகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அவரை தொடர்ந்து காலை 7.54 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் காரில் வந்து இறங்கினார். அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அங்கிருந்த முப்படை தளபதிகள், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சிறப்பு தலைமை இயக்குனர் ராஜேஷ் தாஸ், சென்னை போலீஸ் கமி‌ஷனர் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரை கவர்னருக்கு எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

விழா மேடைக்கு அருகே நடப்பட்டு இருந்த உயரமான கம்பத்தில் காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்து அந்த பகுதியில் மலர் தூவியது.

அதைத்தொடர்ந்து ராணுவம், கடற்படை, விமானப்படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் போலீஸ் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண்-பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படையின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக் கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply