உதயன் பத்திரிகைக்கு இனிமேல் தடையில்லை: ஜனாதிபதி உத்தரவாதம்

யாழ் குடாநாட்டிலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை தடையின்றி வெளிவருவதற்கு அந்தப் பத்திரிகை ஆசிரியரிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவாதமளித்துள்ளார்.  கடந்தவாரம் நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு எனும் பெயரில் உதயன் பத்திரிகைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததுடன், இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் சில பத்திரிகை முகவர்களுக்கு துண்டுப்பிரசுரமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்த விடயத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றதுடன், சுடர் ஒளி, உதயன் ஆசிரியர் என்.வித்தியாதரனுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்றுக்கும் ஏற்பாடு செய்துகொடுத்திருந்தார். இந்த நிலையில், சுடர் ஒளி, உதயன் ஆசிரியர் என்.வித்தியாதரனுடனான சந்திப்பிலேயே மஹிந்த ராஜபக்ஷ இந்த உத்தரவாதத்தை அளித்தார்.

எந்தவித அச்சுறுத்தலுக்கும் உள்ளாகாமல் உதயன் நிறுவனம் சுதந்திரமாக இயங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தனது அரசாங்கம் எடுத்திருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருக்கும் நிலையில், கருத்து வெளியிடும் சுதந்திரத்தையும், ஊடக சுதந்திரத்தையும் நசுக்குவதற்கு இடமளிக்கமுடியாதெனக் குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி, இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடும் சக்திகளை தேடிக் கண்டுபிடித்து ஒடுக்குவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் உறுதியளித்தார்.

ஆரோக்கியமான ஊடக சுதந்திரம் இருப்பதையே அரசாங்கம் விரும்புகிறதென்பதுடன், அந்த வகையில், உதயன் பத்திரிகை தனது பணியைத் தொடரவேண்டுமென்பதையே விரும்புவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply