கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நியூசிலாந்து முதல் இடம் : இந்தியாவுக்கு 86-வது இடம்

உலக அளவில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகின்றன.கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. சிட்னியை தலைமை இடமாகக் கொண்ட லோவி நிறுவனம் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட நாடுகள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தியது.

98 நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் குறித்து இந்த நிறுவனம் ஆய்வு செய்தது. இதில் நோய் கட்டுப்பாடு, அரசியல் செயல்பாடு, பொருளாதார நிலை பராமரிப்பு ஆகியவையும் கண்காணிக்கப்பட்டது.

இதில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையை சிறப்பாக கையாண்ட நாடுகளில் நியூசிலாந்து முதல் இடம் பிடித்ததாக தெரிய வந்துள்ளது. கொரோனா உயிர் இழப்பும் இங்கு மிகக்குறைவாக இருந்தது.

நியூசிலாந்தை அடுத்து வியட்நாம், தைவான், தாய்லாந்து நாடுகளும் கொரோனா பரவலை தடுப்பதில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

கடந்த 36 வாரங்களில் 98 நாடுகளில் எடுத்த புள்ளி விவரங்களின்படி கொரோனா பரிசோதனை, முன் எச்சரிக்கை நடவடிக்கை விழிப்புணர்வு முயற்சிகளில் நியூசிலாந்து சிறப்பாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்ட 98 நாடுகளில் இந்தியாவுக்கு 86-வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்கா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் 94-வது இடத்தில் உள்ளது.

தெற்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் இலங்கை கொரோனா கட்டுப்படுத்துதலில் 10-வது இடத்தை பிடித்துள்ளது. மாலத்தீவு 25-வது இடத்திலும், பாகிஸ்தான் 69-வது இடத்திலும் இருக்கின்றன. நேபாளம் 70-வது இடத்தில் உள்ளது. வங்காளதேசம் 84-வது இடத்திலும் இருக்கின்றன.

சீனாவின் நடவடிக்கை பற்றிய முழு விவரங்கள் கிடைக்காததால் இந்த ஆய்வில் அந்த நாடு இடம்பெறவில்லை. இந்தியாவில் 1.07 கோடி பேருக்கு நோய் தொற்று இருந்தது. இறந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரத்து 847 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் இறப்பு விகிதம் இந்தியாவில் மிகக்குறைவு என்பது தெரிய வந்துள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளில் கொரோனா அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டதும் இந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply