மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்: உலக நாடுகள் கடும் கண்டனம்
கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆங் சான் சூகி மீதான அதிருப்தி மற்றும் கொரோனா அச்சம் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைவான வாக்குகளே பதிவாகின. தேர்தல் முடிவுகள் முறையாக வெளியாகும் முன்பே ஆளும் தேசிய ஜனநாயக கட்சி 83 சதவீத இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றதாக அறிவித்தது. பின்னர் தேர்தல் ஆணையமும் இதனை உறுதி செய்தது. ஆனால் மியான்மர் ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக கூறி முடிவுகளை ஏற்க மறுத்தது. அதேசமயம் ராணுவத்தின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதனை நிராகரித்தது.
இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது.
இந்த நிலையில் பொதுத்தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக நேற்று பாராளுமன்றம் கூட இருந்தது. இந்த கூட்டத்தொடரில் நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத்தால் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய அரசு ஆட்சி பொறுப்பை ஏற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் மியான்மரில் நேற்று ராணுவப்புரட்சி வெடித்தது. பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பே நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்களை ராணுவம் அதிரடியாக கைது செய்தது.
அதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு சட்டம் பிரிவு 417-ன் கீழ் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக ராணுவத்துக்கு சொந்தமான மியாவாடி தொலைக்காட்சியில் அறிவிப்பு வெளியானது. மேலும் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க ஒரு வருட காலத்துக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது.
ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹியாங் நாட்டின் தலைவராக இருப்பார் என்றும், துணை அதிபர் மைன்ட் ஸ்வே அதிபராக (பொறுப்பு) உயர்த்தப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது. அதேபோல் ஒரு வருடத்துக்குள் மியான்மரில் தேர்தல் நடத்தப்பட்டு வெற்றி பெறும் நபரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் உறுதியளித்துள்ளது.
திடீர் ராணுவ புரட்சி காரணமாக மியான்மர் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. நாட்டின் தலைநகர் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மியான்மர் முழுவதும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply