இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகளை அரசாங்கம் நன்றாக கவனித்துவருகின்றது: அகாஷி
உள்நாட்டில் இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களின் தேவைகளை அரசாங்கம் மிகவம் சிறப்பாக நிறைவேற்றிவருகின்றது எனவும் இடம்பெயர்ந்த மக்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் ஐந்தாவது முகாம் ஏற்கெனவே அங்கு நிலவிவந்த இடநெருக்கடி கணிசமாகக் குறைத்துள்ளது எனவும் இலங்கை வந்திருக்கும் ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்துள்ளார். நேற்று சனாதிபதி மாளிகையில் வைத்து சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தபோதே திரு. அகாஷி இதனைத் தெரிவித்தார்.
வவுனியாவில் தங்கியிருக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் குறித்து திரு.அகாஷி அவர்களுக்கு விளக்கமளித்த சனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் நிவாரணக் கிராமங்களின் தங்கியிருக்கும் மக்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தார். 2,,87,000 க்கும் மேற்பட்ட மக்களை மீள்குடியேற்றுவது உண்மையிலேயே பாரியதொரு சவால் எனவும் சனாதிபதி சுட்டிக்காட்டினார். உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதோடு அப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றவேண்டியும் உள்ளது எனவும் தெரிவித்தார்.
அரசாங்கம் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிவரும் அதேநேரம் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் அதற்குச் சமாந்திரமாக முன்னெடுத்து வருகின்றது எனவும் முகாம்களில் தங்கியிருக்கும் சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களிடையே தங்கியிருக்கும் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூக நீரோட்டத்தில் இணைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கும் தான் விரும்புவதாகவும் சனாதிபதி மேலும் தெரிவித்தார். அரசியல் ரீதியாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவித்த சனாதிபதி அது தொடர்பாக தன்னிடம் ஒரு தெளிவான திட்டம் இருப்பதாகத் தெரிவித்தார். பிரச்சினைக்கான தீர்வு உள்நாட்டிலேயே கண்டறியப்பட வேண்டும் என வழியறுத்திக்கூறிய அவர் 13 ஆவது சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் அர்ப்பணிப்போடு செயற்பாட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டங்களை பாராட்டிய அகாஷி இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பானிய அரசாங்கம் நிதியுதவி அளிக்கும் எனவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply