ராணுவ வாகனத்தில் குழந்தை பெற்ற கர்ப்பிணி: சுகாதார பணியாளருக்கு குவிந்த பாராட்டுகள்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடும் குளிர்காலம் நிலவி வருகிறது. இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நரிகூட் பகுதியில் வசித்து வரும் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. அந்த ஊரில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை.

இதனால், உடனிருந்த சுகாதார பணியாளர் சாதியா பேகம் உடனடியாக இந்திய ராணுவத்தின் கலரூஸ் கம்பெனி படை பிரிவுக்கு போன் செய்துள்ளார். அவரது அவசரம் புரிந்த ராணுவமும், வாகனம் ஒன்றை நரிகூட் பகுதிக்கு அனுப்பி வைத்தது. மருத்துவ குழு ஒன்றும் உடன் சென்றது.

நரிகூட்டில் இருந்து சுகாதார பணியாளரையும் உடன் அழைத்து கொண்டு வாகனத்தில் கர்ப்பிணியை ஏற்றி சென்றனர். ஆனால், வழியில் அந்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்து உள்ளது.

இதனால், அடர்பனி மற்றும் கடும் பனிப்பொழிவுக்கு இடையே சாலையோரம் வண்டியை நிறுத்தும்படி பேகம் கூறினார். வேறு வழியின்றி, மருத்துவ குழு உதவியுடன் ராணுவ வாகனத்தில் பெண்ணுக்கு பேகம் பிரசவம் பார்த்துள்ளார்.

இதன்பின்னர், அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு அசாதாரண சூழலில் பிறந்த அந்த குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர். பின்பு அவர்கள் இருவரும் கலரூஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சரியான தருணத்தில் நம்பிக்கையுடன் செயல்பட்ட சுகாதார பணியாளருக்கு ராணுவ கம்பெனி படை பிரிவின் தளபதி பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். இதேபோன்று கர்ப்பிணியின் கணவர் குலாம் ரபானியும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார். அந்த பகுதி மக்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply