தமிழீழம் பற்றி பேசிப் பயனில்லை: கருணாநிதி
”இனி தமிழ் ஈழம் பற்றி பேசி பயனில்லை, மாறாக தமிழர்களுக்கு சம உரிமை, தமிழுக்கு சம தகுதி, தமிழர் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப்பகிர்வு போன்ற கோரிக்கைகளையே வலியுறுத்த வேண்டும்” என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். இன்று தமிழக சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் நிலை குறித்து கொண்டுவரப்பட்ட சிறப்பு கவனயீர்ப்புத் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையிலேயே கருணாநிதி இவ்வாறு கூறினார்.
திமுக நிறுவனர் மறைந்த அண்ணாதுரை, இந்தியாவில் பிரிவினைவாதத்தடை சட்டம் வந்தவுடன் திராவிட நாடு கொள்கையை கைவிட்டதைப்போல் சந்தர்ப்ப சூழலுக்கேற்பவே எந்தவொரு மக்கள் இயக்கமும் செயல்படவேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.
”தவிரவும், மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக பன்னாட்டு அளவில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ மீது விசாரணை வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைக்காமல், சிங்களர்களுக்கு ஆத்திரமூட்டும் படி எதுவும் பேசாமல், அந்நாட்டு அரசுடன் இணைந்து செயல்பட்டு தமிழர்நலன் காக்கவேண்டும், அதே நேரம் மத்திய அரசு இவ்விஷயத்தில் இன்னமும் தீவிரமாக செயல்படவேண்டும்” என்றும் முதல்வர் மேலும் கூறினார்.
இலங்கை அமைச்சர்கள் ஆறுமுகம் தொண்டைமான் தன்னை சந்தித்து இடம்பெயர்ந்தோர் மறுவாழ்வு குறித்து விவாதித்திருப்பதாகவும் தான் நம்பிக்கையுடனேயே எதிர்காலத்தை நோக்குவதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply