பாதை மூடினாலும் சேவை தொடர்கிறது: செஞ்சிலுவைச் சங்கம்
வன்னிக்கான ஓமந்தைச் சோதனைச் சாவடியில் கண்காணிப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக சில நாட்களாக நிறுத்தியிருந்தாலும், மக்களுக்கான அவசர போக்குவரத்து அனுசரணையைத் தொடர்ந்து வழங்கிவருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்கள் போக்குவரத்துக்கும், உணவுப் பொருள்களை எடுத்துச்செல்வதற்கும் அவசியமான உத்தரவாதங்கள் கிடைக்கப்பெறாத காரணத்தினால் கடந்த 18ம் திகதி முதல் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரசன்னம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.
எனினும், நொவெம்பர் மாதம் 18ம் திகதி அவசர சிகிச்சைகளுக்காக வன்னியிலிருந்து வவுனியா பொது மருத்துவமனைக்கு வந்த 24 நோயாளர்களின் பயணத்துக்கான அனுசரணையை செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியிருந்ததாக செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரி போல் கஸ்ரெலா தெரிவித்தார்.
இதுதவிரவும், மோதல்களில் பலியான போரிடும் தரப்புக்களின் 18 சடலங்களை எடுத்துச்செல்வதற்கும் தாம் அனுசரணை வழங்கியதாக அவர் கூறினார்.
“ஒரு தெளிவான ஏற்பாடு செய்துகொள்ளப்படும் வரையில், முரண்பாட்டுடன் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புக்களையும் ஒவ்வொரு தேவைகளுக்காகவும் தொடர்புகொண்டு அம்பியூலன்ஸ் வண்டிகளின் பயணம், அரச படைகள் மற்றும் விடுதலைப் புலிகளின் உடலங்களை பரிமாற்றும் பணிகளை செஞ்சிலுவைச் சங்கம் முன்னெடுக்கும்” என்று அவர் கூறினார்.
ஓமந்தைச் சோதனைச் சாவடி மூடப்பட்டதால், வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிவரும் உதவிகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட கஸ்ரெலா,
மோதலில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புக்களுக்குமிடையே ஒரு நடுநிலையான இடைத்தரகராக கடந்த 20 வருடங்களாக செஞ்சிலுவைச் சங்கம் ஆற்றிவரும் பங்கு முக்கியமானது” என்று சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, இரண்டு தரப்புக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பகுதிகளுக்கிடையிலான போக்குவரத்துக்கு ஒரு ஏற்பாட்டைச் செய்ய செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கஸ்ரெலா மேலும் தெரிவித்தார்.
அரசாங்க மற்றும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கிடையிலான போக்குவரத்துக்கு ஒரு ஏற்பாட்டைச் செய்வது, மக்களின் பாதுகாப்பான பயணம், உணவுப்பொருள் எடுத்துச்செல்லல், அம்பியூலன்ஸ் வண்டிகளின் போக்குவரத்து மற்றும் மோதலில் கொல்லப்படுபவர்களின் உடல்களை பரிமாற்றல் ஆகியவற்றுக்கு மிகவும் அவசியமானது என்று தெரிவித்த கஸ்ரெலா,
எனினும், இரண்டு தரப்புக்களினதும் எல்லையைக் கடப்பதற்கான இடம், கடக்கும் நேரம் போன்ற விடயங்களில் அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டால் மாத்திரமே இது சாத்தியம் என்று சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply