மன்னார், கொக்கிளாய், மயிலிட்டி மற்றும் பருத்தித்துறையில் புதிய மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும்
வடக்கின் வசந்தம் திட்டத்தின், 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென அரசாங்கம் 869 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்திலுள்ள குளங்கள் மற்றும் வாவிகளில் 37 இலட்சம் மீன்குஞ்சுகள் விடப்படவிருக்கின்றன என்று கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா நேற்றுத் (02) தெரிவித்தார்.
அதேநேரம் வடமாகாணத்திலுள்ள குளங்களிலும், வாவவிகளிலும் மீன்பிடித்தொழிலில் ஈடுபடவென இப்பிரதேசங்களைச் சேர்ந்த நன்னீர் மீனவர்களுக்கு 600 வள்ளங்களும், 3600 மீன் வலைகளும் வழங்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மீன்பிடி, கடற்றொழில் அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட விருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜாஎல, குடாவெல்ல ஆசிரி ஹோட்டலில் நடைபெற்ற இச்சசெய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கின் வசந்தம் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் போது மன்னார், கொக்கிளாய், மயிலிட்டி, பருத்தித்துறை ஆகிய நான்கு இடங்களிலும் மீன்பிடித்துறை முகம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடமாகாண அபிவிருத்திக்கான விசேட செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் வடக்கின் வசந்தம் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இத்திட்டத்தின் கீழ் மீன்பிடி மற்றும் கடற்றொழில் அமைச்சின் ஊடாக பல விதமான அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கென குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
இத்திட்டங்களின் நோக்கம் வடமாகாணத்தில் 1983ம் ஆண்டுக்கு முன்னர் பிடிக்கப்பட்டளவு மீனை மீண்டும் பிடிப்பதேயாகும். 1983ம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தில் 67564 மெற்றிக் தொன் மீன்பிடிக்கப்பட்டது. இது முழு நாட்டிலும் அப்போது பிடிக்கப்பட்ட மீனில் 40 சதவீதமாகும்.
ஆனால் பயங்கர வாதப் பிரச்சினை உருவான பின்னர் வடமாகாணத்தில் மீன்பிடித்துறை பாரியளவு வீழ்ச்சியுற்றது. 2007ம் ஆண்டில் 15250 மெற்றிக் தொன்னும், 2008ம் ஆண்டில் 3840 மெற்றிக் தொன்னும் என்றபடியே வடமாகாணத்தில் மீன்பிடிக்கப்பட்டது. இதன் விளைவாகவே தென்பகுதியில் மீன் விலை அதிகரித்தது.
தென்பகுதி உட்பட முழு நாட்டு மக்களுக்கும் நியாயமான விலையில் மீனைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் வடக்கின் வசந்த திட்டத்தின் கீழ் மீன்பிடி மற்றும் கடற்றொழில் அமைச்சின் திட்டங்கள் வகுகப்பட்டிருக்கின்றன.
வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களில் துரிதகதியில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள். அவர்கள் தங்களது ஜீவனோபாயத்திற்கென மீன்பிடித்துக் கொள்ளும் வகையிலேயே வடமாகாணத்திலுள்ள குளங்களிலும், வாவிகளிலும் மீன் குஞ்சுகளை இடும் திட்டம் ஆரம்பிக்ப்பட்டிருக்கின்றது.
இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வவுனியாவிலுள்ள குளங்களில் 15 ஆயிரம் மீன்குஞ்சுகளும், செட்டிக்குளத்திலுள்ள குளங்களில் 50 ஆயிரம் மீன்குஞ்சுகளும் இடப்பட்டுள்ளன. 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்திலுள்ள சகல குளங்களிலும், வாவிகளிலும் 37 இலட்சம் மீன்குஞ்சுகள் இடப்படவுள்ளன.
அதேநேரம் வடமாகாண மீன்பிடித் துறை சகல மட்டங்களிலும் மேம்படுத்தப்படும். அதற்குத் தேவையான சகல திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply