கப்டன் அலி கப்பலிலிருந்த பொருட்கள் வேறொரு கப்பல் மூலம் சென்னையில் இருந்து கொழும்புக்கு கொண்டுவரப்படும்

இலங்கைத் தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் வந்த கப்டன் அலி (வணங்கா மண்) கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலுள்ள தமிழர்கள் கப்டன் அலி என்ற கப்பலுக்கு வணங்காமண் என பெயர் சூட்டி சுமார் 884 தொன் எடை கொண்ட நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்தனர்.

கடந்த மாதம் 4 ஆம் திகதி இலங்கை வந்த அந்த கப்பலை இலங்கை அரசு அங்கிருந்து வெளியேற்றியது. இதையடுத்து சென்னை நோக்கி வந்த கப்பலுக்கு இந்திய கப்பற்படையும் சோதனை கொடுத்தது. அந்த கப்பலை சென்னை துறைமுகத்துக்கு வெளியே நடுக்கடலில் நிறுத்தி வைத்தது.

இதையடுத்து வணங்காமண் கப்பலை சென்னை துறைமுகத்துக்குக் கொண்டுவர அனுமதி வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் மனிதாபிமான நடவடிக்கையாக இந்த கப்பலை சென்னை துறைமுகத்துக்கு வர அனுமதி அளிப்பதாக மத்திய கப்பல்துறை போக்குவரத்து அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் கப்டன் சுபாஷ் குமார் கூறுகையில்;

வணங்காமண் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதை நான்காவது தளத்தில் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கப்பல் இங்கு வந்தவுடன் அதில் இருக்கும் பொருட்களை உள்ளூர் பொலிஸாரும், கப்பற்படையும் சோதனையிடுவார்கள்.

அதன் பின்னர் இந்த பொருட்கள் தனித்தனி கொள்கலன்களில் அடைக்கப்பட்டு வேறொரு கப்பல் மூலம் இன்னும் நான்கு நாட்களில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply