ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமரை எகிப்தில் சந்திப்பார்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இம் மாத நடுப்பகுதியில் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்து பேசவிருப்பதாக அறியவருகிறது. எகிப்தில் இந்த சந்திப்பு நடைபெற விருக்கிறது. எகிப்தின் சார்ம் எல்ஷெய்க் நகரத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் அணிசேரா அமைய நாடுகளின் 15 ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவரும் சந்தர்ப்பத்திலேயே இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்து பேச ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கலாநிதி மன்மோகன் சிங் இரண்டாவது தடவையாக இந்திய பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த அவரை சந்திக்கும் முதலாவது சந்திப்பாக இது அமையும்.
எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் அணிசேரா இயக்க நாடுகளின் 15 ஆவது உச்சிமாநாடு நிகழ்வுகள் முதல் 4 நாட்களுக்கு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டங்கள் நடைபெறவுள்ளன இறுதி இரு தினங்களான 15 ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் நாட்டுத் தலைவர்களின் மாநாடு நடைபெறவிருக்கிறது.
இலங்கையில் யுத்தத்தின் பின்னரான, அரசாங்கத்தின் தற்போதைய மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அரசியல் தீர்வு குறித்த செயற்பாடுகள் பற்றி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடனான இந்த நேரடி சந்திப்பின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விளக்கமளிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இநேநேரம், அணிசேரா இயக்க நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனான இருதரப்பு சந்திப்புகளுக்கும் இலங்கை அனுமதி கோரியிருப்பதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply