டொலர்களாலும் பவுண்களாலும் மட்டும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது

“பவுண்களாலும், டொலர்களாலும் மட்டும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அதற்கு தூரநோக்குடனான கடின உழைப்பு முக்கியமானது” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கஷ்டமான விடயம் என எண்ணி அந்தந்த காலத்தில் செய்ய வேண்டியதைக் கைவிட்டு விடுவது தலைவனுக்குரிய இலட்சணமல்ல. கஷ்டமானது என்பதற்காக நல்ல இலக்குகளை கைவிடக் கூடாதெனவும் தெரிவித்த ஜனாதிபதி, பயங்கரவாதத்துக்கெதிரான நடவடிக்கையின் போது தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளான போதும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தமது கடமையைக் கைவிட்டுப் போகவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

எமது படை வீரர்கள் இரவு பகல் என்று பார்க்கவில்லை; தமது உரிமைகள் கொடுப்பனவுகள் பற்றிச் சிந்திக்கவில்லை; பயங்கரவாதத்தை ஒழிக்கும் இலக்கிலேயே கருத்தாயிருந்து 24 மணித்தியாலமும் உழைத்தனர். அதன் மூலமே இலக்கை வெற்றிகொள்ள முடிந்ததெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் பழைய மாணவர்களான பிரதிப் பாதுகாப்பு அமைச்சரும் பிரதமருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட மற்றும் சிவில் பாதுகாப்புச் செயலணியின் பணிப்பாளர் நாயகம் சரத் வீரசேகர ஆகியோரைப் பாராட்டும் விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்ட வீரதீரச் செயல்களைப் பாராட்டி “ஆனந்த விருஹரசர” என்ற தொனியில் இவர்களுக்கான பாராட்டு விழா நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, டளஸ் அழகப்பெரும, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, பி. தயாரத்ன, கீதாஞ்சன குணவர்தன, ராஜித சேனாரத்ன உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

முழு உலகையும் வியப்பிலாழ்த்தும் வகையில் எமது படையினர் பயங்கரவாதத்தை வெற்றிகொண்டுள்ளனர். நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் இது என்பதை மக்கள் உணர்ந்து பாராட்டுகின்றனர். இதற்காக ஆனந்தாக் கல்லூரி தமது பழைய மாணவர்களின் திறமையைப் பாராட்டி விருது வழங்கி கெளரவிக்கின்றது.

இந்த வெற்றி நாட்டின் சகல தரப்பு மக்களினதும வெற்றி என்பதுடன் இது ஆனந்தாக் கல்லூரியினதும் வெற்றியாகிறது. ஏனெனில் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பிரிகேடியர் பிரசன்ன சில்வா, பிரிகேடியர் ஷாகி கால்லகே போன்ற இரண்டாம் அணித் தலைவர்களுட்பட பல தலைவர்கள் இந்த ஆனந்தாக் கல்லூரியிலிருந்து தான் உருவாகியுள்ளனர்.

1983ல் பயங்கரவாதம் பலிகொண்ட எமது முதலாவது இராணுவ அணிக்குத் தலைமைதாங்கியவர்களும் ஆனந்தாக் கல்லூரி பழைய மாணவர்களே. அதேபோன்று பயங்கரவாதத்தை ஒழிக்கும் இறுதி புதுமாத்தளன் யுத்தத்திற்குத் தலைமைத்துவம் வழங்கியவர்களும் இக்கல்லூரியின் பழைய மாணவர்களே.

டி. பி. ஜாயா, சுந்தரலிங்கம், மேத்தானந்த போன்ற சகல இன மதங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு கற்றுள்ளனர். உலகிலேயே மிகக் கொடூரமான பயங்கரவாதத்தினை அழிக்க எம்மிடமிருந்த சிறந்த ஆயுதம் சிறந்த தலைமைத்துவமே. இதனால் ஆனந்தாக் கல்லூரி பெருமையடைகிறது. எமது வீரர்கள் வெற்றிபெற்ற விதமானது முழு நாட்டிலுமுள்ள பாடசாலை மாணவர்களுக்கும் சிறந்த தலைவர்களாக உருவாவது எவ்வாறு என்ற படிப்பினையைப் புகட்டியுள்ளது.

பயங்கரவாதத்துக்கெதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட எமது தலைவர்களுக்கு ஒரு நோக்கம் இருந்தது. நோக்கம் மட்டுமே போதுமானதல்ல, அது நியாயமானதாகவும் அமைவது அவசியம். உலகில் பல தலைவர்களுக்கு நோக்கமிருந்தது. இந்த வகையில் ஹிட்லர், பொல்பொட் அதுபோல பிரபாகரனுக்கும் கூட நோக்கம் இருந்தது. எனினும் அது நியாயமானதா என்பதே கேள்வி.

மிகக் கொடூரமான பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்க மேற்கொள்ளப்பட்ட இலக்கு நியாயமானது என முழு நாடும் ஏற்றுக்கொண்டது. நோக்கம் மட்டும் போதாது, அந்த நோக்கம் மாறாமல் இருப்பதும் முக்கியம். எமது பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த மூன்று வருடத்தில் படைக்கு வந்தவர்களல்ல. அவர்கள் பல தசாப்தங்களாக பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். கோதாபய ராஜபக்ஷ, சரத்பொன்சேகா போன்றோர் வடமராட்சி யுத்தத்திலும் இருந்தவர்கள். வசந்த கரணாகொட நீண்ட காலம் கிழக்கின் கடற்படைக் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டவர். 1990ல் இவர்கள் அனைவருமே யுத்தக் களத்தில் இருந்தவர்கள். எனினும் இவர்கள் ஸ்தீரமான ஒரே நோக்கில் வழிநடத்தப் படவில்லை. தலைவர்களின் நோக்கங்கள் நியாயமானதாக இருந்தால் மட்டும் போதாது. அது கைவிடப்படாது அர்ப்பணிப்புடன் தொடரப்படவேண்டியது.

கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க நேரும் போது நோக்கத்தைக் கைவிட்டுச் செல்லும் தலைவன் தன்னையும் நாட்டையும் சீரழித்துக்கொள்கிறான். நோக்கத்தை வெற்றிகொள்ள வேண்டுமெனில் அறிவுசார்ந்த திட்டம் வேண்டும்.

திட்டங்களைத் தீட்டும்போது எதிர்கொள்ளப்போகும் சவால்கள், கஷ்டங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். புலிகள் நச்சுவாயு உபயோகிப்பார்கள், மாரிகாலம் வரும் அப்போது எமது படையினர் பின்வாங்கிவிடுவார்கள் என சிலர் கூறினார்கள். எனினும் நாம் அதற்காக ஏற்கனவே தயாரானோம். இதனால் இந்த கஷ்டங்களையும் எமக்கு வாய்ப்பாக்கிக்கொள்ள முடிந்தது.

மனித உரிமை தொடர்பில் உண்மையற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோது இதுபற்றி நாம் முன்னரே அறிந்திருந்தோம். இதனால்நாம் எந்தளவு விமானத் தாக்குதல் நடத்திய போதும் கனரக ஆயுதங்கள் உபயோகித்தபோதும் அவை எந்த சிவில் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் உபயோகிப்பதற்கு நாம் திட்டம் தீட்டியிருந்தோம். அதனால்தான் அதற்கு நாம் மனிதாபிமான நடவடிக்கையென பெயரிட்டோம்.

அதனால்தான் வெற்றிகளைப் படையினருக்கு வழங்கி தோல்வியைத் தலைவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். என்னைப் பற்றி எவரும் எதைக் கூறினாலும் விமர்சித்தாலும் தாய்நாட்டுக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடிய படையினரை எவரும் விமர்சிக்கக் கூடாதென நான் கூற விரும்புகிறேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆனந்தாக் கல்லூரி அதிபரினால் ஜனாதிபதிக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் ஜனாதிபதி, கோதாபய ராஜபக்ஷவுக்கும், இராணுவத் தளபதி, கடற் படைத் தளபதி ஆகியோருக்கும் விருதுகளை வழங்கி கெளரவித்தமை குறிப்பிட த்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply