அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது ஏன்? : பிரேமலதா பரபரப்பு பேட்டி

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

2011-ல் அ.தி.மு.க., தே.மு.தி.க.வுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்தது. அப்போது, அவர்களுடன் தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, அ.தி.மு.க. சார்பில் தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. உடனே, தே.மு.தி.க. சார்பில் கொடும்பாவி எரிக்கப்பட்டது போன்ற பல நிகழ்வுகள் நடத்தப்பட்டது. உடனடியாக, ஜெயலலிதா தனது சுற்றுபயணத்தை ரத்து செய்துவிட்டு, விஜயகாந்த் வந்தால் தான் நான் பிரசாரத்துக்கே செல்வேன் என்று சொல்லி விஜயகாந்தை சந்தித்து 41 தொகுதிகளை கொடுத்து சிறப்பான கூட்டணி அமைத்து, அமோக வெற்றி பெற்று, ஆளும் கட்சி, எதிர்க்கட்சியாக அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் அமர்ந்தது அனைவருக்கும் தெரியும்.

இப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி மூலமாகத்தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்களிடம் கூட்டணிக்கு வந்தார். நாங்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு செல்லவில்லை. விஜயகாந்தை அனைவரும் வந்து சந்தித்தார்கள். அதன்பிறகு கூட்டணி உருவானது. நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் கால தாமதமாக 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதுவும் நாங்கள் விரும்பாத தொகுதிகளை கடைசி நேர கட்டாயத்தால் அப்போது ஏற்றுக்கொண்டோம். அனைத்து தொகுதிகளிலும் அந்த கூட்டணி தோல்வியை சந்தித்தது.

அந்த நிகழ்வு மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் இந்த முறை பேச்சுவார்த்தையை டிசம்பரிலேயே ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். ஆனால், அவர்கள் காலதாமதப்படுத்தினார்கள். கடைசி நிமிடம் வரை எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்ற எண்ணிக்கையும், தொகுதிகளின் பெயர் பட்டியலும் இறுதி செய்யப்படவில்லை.

அவர்கள், தே.மு.தி.க.வை அழைத்து பேசுவதற்கு பதில் மற்ற கட்சிகளை அழைத்து பேசி வந்தார்கள். ஆனால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ தே.மு.தி.க.வுக்கு பக்குவம் இல்லை என்றும், பக்குவமற்ற அரசியலை தே.மு.தி.க. மேற்கொண்டு வருகிறது என்றும் கூறி உள்ளார்.

இப்போது கூறுகிறேன், கூட்டணியை உருவாக்கி 41 தொகுதிகளை வழங்கி வெற்றிக்கூட்டணியாக மாற்றியது ஜெயலலிதா தான். அந்த பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை.

அவர்கள் பா.ம.க., பா.ஜ.க.வினரை அழைத்து பேசிவிட்டு, தே.மு.தி.க.வை கடைசியில் அழைத்து பேசினார்கள். எல்லோரையும் ஒரே நேரத்தில் அழைத்து பேசி தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுங்கள் என்று நாங்கள் கூறினோம். ஆனால், அவர்கள் பரிசீலிக்கவில்லை. உண்மையிலேயே இந்த கூட்டணியை வெற்றிக்கூட்டணியாக மாற்றும் பக்குவம் இல்லாத முதல்-அமைச்சராகத்தான் எடப்பாடி பழனிசாமி இருந்தார்.

இறுதிகட்ட பேச்சுவார்த்தையின் போதும் அவர்கள் 12, 13 தொகுதியில் இருந்து மேலே ஏறி வரவில்லை. இதற்கு விஜயகாந்த் ஒத்துக்கொள்ளவில்லை. நாங்கள் 41 இடங்களில் இருந்து குறைத்து 25 என்று பேசி இந்த கூட்டணி சுமுகமாக வரவேண்டும் என்பதற்காக பலமுறை பேசி மிக மிக விட்டுக்கொடுத்தோம். கடைசியில் 18 சட்டமன்ற தொகுதியும் 1 மாநிலங்களவை உறுப்பினரும் கொடுங்கள் என்று இறுதியாக விஜயகாந்த் கூறியதை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தோம்.

ஆனால், அவர்கள் 13 தொகுதியில் இருந்து இறங்கி வரவில்லை. கடைசியில் நாங்கள் அதற்கும் ஒத்திசைந்து, எந்தெந்த தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம் என்று கேட்டதற்கு அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல், முதலில் நீங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுங்கள் அதற்கு பிறகு எந்தெந்த தொகுதி என்று சொல்கிறோம் என்றார்கள். இதற்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் யாரும் உடன்படவில்லை.

எனவே, இந்த கூட்டணியில் இருந்து கனத்த இதயத்தோடு விலகிக்கொள்கிறோம் என்று விஜயகாந்த் தெரிவித்தார்.

அதன்பிறகு, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி, டி.வி.தினகரன் எங்களை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தையை தொடங்கினார். பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, வேட்பாளர்களும் உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தே.மு.தி.க-அ.ம.மு.க. கூட்டணி நிச்சயம் அமோக வெற்றி பெற்று தமிழக அரசியலில் ஒரு சரித்திரம் படைக்கும். இந்த கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தான்.

தேர்தல் பிரசாரத்தில் எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் ஈடுபடுவார்கள். இறுதிகட்ட பிரசாரத்தில் விஜயகாந்தும் ஈடுபடுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறும்போது, “விஜயகாந்த் உடல்நிலை கொஞ்சம் சரியில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் நன்றாக இருக்கிறார். பிரசாரத்துக்கு எல்லாம் வருவார். இன்னும் சிறிது காலம் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களின் அறிவுரைப்படி விஜயகாந்த் தேர்தலிலும் போட்டியிடவில்லை.

இது ஒட்டுமொத்த தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தெரியும். விஜயகாந்த் ஓய்வெடுத்து மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் வீறுகொண்டு எழுந்து தே.மு.தி.க. என்ன நோக்கத்திற்கு தொடங்கப்பட்டதோ? அதை அடைவார்” என்று தெரிவித்தார்.

பேட்டியின் போது, தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply