மடுமாதா ஆலய திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள்

கத்தோலிக்க மக்களின் யாத்திரைத் தலமாக விளங்கும் மடுமாதா ஆலயத்தின் ஆகஸ்ட் திருவிழா இம்முறை சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கலந்துரையாட அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ, பிரதியமைச்சர்களான நியோமல் பெரேரா மற்றும் சரத்குமார குணவர்த்தன உட்பட பலரும் மடுவுக்கு வியாழக்கிழமை சென்றிருந்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி மடுப்பகுதி புலிகளிடம் இருந்து படையினரால் மீட்கப்பட்டது.

அப்பகுதியில் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் காணப்படுவதால் அவை அகற்றப்பட்ட பின்னரே பொதுமக்கள் ஆலயத்துக்கு வருவதற்கும் திருவிழாவை கொண்டாடவும் அனுமதிக்கப் படுவார்கள் என பாதுகாப்பு தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது. இதனால், கடந்த ஆகஸ்ட் திருவிழா நடைபெறவில்லை. அத்துடன், பொதுமக்களும் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தற்போது அங்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் ஆகஸ்ட் திருவிழாவை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் உற்சவம் ஆரம்பமாகி நவநாள் ஆராதனைகள் நடைபெற்று 15 ஆம் திகதி மரியன்னையின் விண்ணேற்பு திருவிழா இடம்பெறும்.

எதிர்வரும் ஆகஸ்ட் திருவிழாவுக்கு நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து சுமார் 4 இலட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை, மடுத்திருவிழாவுக்கு வருகின்ற பக்தர்களின் சுகாதாரம், குடிநீர், உணவுக் கடைகள் என்பன தொடர்பாக அண்மையில் மன்னார் கச்சேரியிலும் உயர் மட்டக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதனிடையே மன்னார் ஆயர் அதி.வண. இராயப்பு யோசப் ஆண்டகை எதிர்வரும் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வன்னி படை கட்டளை அதிகாரியை சந்தித்து மடுத்திருவிழா தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மடுவில் ஒரு அருட்தந்தையும் மூன்று அருட்சகோதரிகளும் ஆறு பொது மக்களும் தங்கியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply