இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை பிரித்தானியா தளர்த்தியது

இலங்கைக்குப் பிரயாணங்களை மேற்கொள்வது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் புதிய பயண அறிவித்தலை விடுத்துள்ளது. இலங்கைக்குப் பயணிப்பது தொடர்பில் பிரித்தானிய பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளதாக அந்த நாட்டின் தூதுவர் பீற்றர் ஹெய்ஸ் அறிவித்துள்ளார்.

இலங்கைக்கான பிரயாணங்களை மேற்கொள்வது தொடர்பில் ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல் குறித்தான மாற்றங்கள் பற்றி பிரித்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி பீற்றர் ஹெய்ஸ் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-

“இலங்கைக்கு வருகை தருவதில் பிரித்தானிய பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஆலோசனை அறிவித்தல்களில் விதித்திருந்த கட்டுப்பாடுகளை நாம் தளர்த்தியுள்ளோம் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். யால தேசிய பூங்காவில் சிறுத்தைகளை அவதானித்தல், அறுகம்பைக் கடலில் நீர்ச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபடுதல் அல்லது உலகின் ஆழமான இயற்கைத் துறைமுகங்களில் ஒன்றான திருகோணமலை துறைமுகத்தைக் கண்டு களித்தல் என்பவற்றை அனுபவிப்பதில் விடுமுறையைக் கழிக்கும் பிரித்தானியர்களை நாம் இனிமேலும் தடைசெய்யப் போவதில்லை. இலங்கையின் இந்தப் பகுதிகளில் முன்னேற்றமடையும் பாதுகாப்பு நிலைமைகளின் அடிப்படையிலேயே நாம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளோம்.

அண்மையில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் ஸ்திரமற்ற பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு கிழக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கு பிரிட்டன் உல்லாசப் பயணிகள் பிரயாணிப்பதை நாம் ஊக்குவிக்காததுடன் இலங்கையின் வட பகுதிக்கான அனைத்துப் பிரயாணங்கள் தொடர்பிலும் தொடர்ந்தும் எச்சரிக்கிறோம். இலங்கையில் சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ளத் திட்டமிடும் பிரித்தானியர்கள் எங்களது பிரயாண அறிவித்தல்களை முழுமையாக வாசிப்பதற்கு நாம் ஊக்குவிக்கிறோம்’.

பிரித்தானிய வாசிகள் வெளிநாடுகளில் தங்களது பாதுகாப்புத் தொடர்பில் நன்கறிந்து கொண்டு தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உதவியாக தகவல்களை ஐக்கிய இராச்சிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகம் (FCO) வழங்குகிறது. இது அரசியல் ஸ்திரமின்மை, மோதல் நிலைமைகள், பயங்கரவாத செயற்பாடுகள், பிரித்தானியர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள், சட்டமின்மை, வன்முறை , இயற்கை அனர்த்தம் , தொற்றுநோய் அபாயங்கள் மற்றும் விமான, கப்பல் பாதுகாப்பு என்பவற்றிலிருந்து எழக்கூடிய தனிப்பட்ட பாதுகாப்பு மீதான அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களையும் உள்ளடக்குகிறது. ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் இலங்கைக்கான பிரயாணங்கள் மீதான முழுமையான அறிவித்தல்களை கீழ்வரும் இணையத்தள முகவரியில் பார்வையிடலாம்;

http://www.fco.gov.uk/en/travelling-and-living-overseas/travel-advice-by-country/asia-ocenia/sri-lanka

ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகம் அதன் பிரயாண இணையத்தளத்தில் தகவல்களை கிரமமாக மீளாய்வு செய்வதுடன் குறிப்பாக ஏதேனும் பாரதூரமான சம்பவங்களின் பின்னர் அதன் அறிவித்தல்களில் தரத்தில் பொருத்தமான மாற்றங்களையும் மேற்கொள்கிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply