பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அழைப்பே தவிர பதாகைகளுக்கல்ல : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

காணாமல் போனோரது உறவுகளுக்கு நான் விடுத்திருக்கும் அழைப்பு, பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அழைப்பேயன்றி பதாகைகளுக்கான அழைப்பல்ல என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-

எனது உறவுகளையும், நான் நேசிக்கும் மக்களையும் நானும் இழந்தவன் என்ற வகையில் அத்தகைய இழப்புக்கள், வலிகளின் வேதனைகளையும், துயரங்களையும் நன்கு அறிந்தவன். எனவேதான் காணாமல்போன உறவுகளின் தேடலுக்கும், கோரிக்கைக்கும் பரிகாரம் காணவேண்டுமென்று விரும்புகின்றேன்.

இவ்விடயத்தில் தீர்வொன்று காணப்பட வேண்டும்.அது தீராத பிரச்சினைகளாகத் தொடர்வதால் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நன்மையுமில்லை.இந்தப்பிரச்சினைகளை வைத்து பிழைப்பு நடத்துகின்றவர்களும், பதாகைகளை பார்வைக்கு வைத்து பணம் சம்பாதிப்பவர்களுமே இப்பிரச்சினை தீராப்பிரச்சினையாக தொடர வேண்டுமென விரும்புகிறார்கள்.

ஆனால், நாம் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கும், காயங்களுக்கும் ஆறுதலளிக்கும் பரிகாரங்களைக் காண்பதனூடாக அவர்களை நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கி முன்நகர்த்தவே விரும்புகின்றேன்.

அதனடிப்படையில் பதாகைகளை அல்ல பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கே நான் உரிமையுடன் அழைப்பு விடுத்திருக்கிறேன்.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடி பரிகாரத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் முயற்சித்து வருகின்றேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply