மலேசியாவுடனான தூதரக உறவுகளை துண்டித்தது வடகொரியா
அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடிக்கிறது.இந்த நிலையில் மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வட கொரியாவை சேர்ந்த, முன் சோல் மியோங் என்பவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ள அமெரிக்கா அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி மலேசிய அரசை கேட்டுக்கொண்டது. இதனை ஏற்று, முன் சோல் மியோங்கை அமெரிக்காவுக்கு நாடு கடத்த மலேசிய கோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டது.
இதனால் கடும் கோபமடைந்த வட கொரியா மலேசியாவுடனான தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மலேசியாவில் வசிக்கும் ஒரு வடகொரியருக்கு எதிராக அமெரிக்கா விதித்த பண மோசடி குற்றச்சாட்டுகள் அபத்தமான கட்டுகதை. எங்கள் அரசின் பிரதான எதிரியால் திட்டமிடப்பட்ட சதி.
அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து வடகொரியாவுக்கு எதிராக மிகப்பெரிய விரோத செயலை செய்த மலேசியாவுடனான தூதரக உறவுகளை முற்றிலுமாக துண்டிக்கிறோம். அமெரிக்கா இதற்கு உரிய விலை கொடுக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கொலை செய்யப்பட்டதில் இருந்து வட கொரியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவுகள் கிட்டத்தட்ட முடங்கியே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply