அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிக்கு பின்லாந்து அரசு தற்காலிக தடை
உலக அளவில் இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி முக்கியமானது ஆகும்.
இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதாக கூறி பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. எனினும், தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் செயல் திறன் மிக்கது என்று உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருந்து ஒழுங்கு முறை ஆணையமும் தெரிவித்துள்ளன.
இதைத்தொடர்ந்து ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த அந்நாட்டு அரசுகள் அனுமதி வழங்கின. ஆய்வு அறிக்கைகளின் முடிவுகளில் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது தெளிவாகியிருப்பதால், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பின்லாந்து நாட்டில் தற்போது அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் இரண்டு பேருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டதால், அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியின் பயன்பாட்டை அந்நாட்டு அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இது குறித்து மருத்துவ ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஒரு வார காலம் ஆகலாம் என்பதால், அதுவரை அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பின்லாந்து நாட்டு மக்களுக்கு செலுத்த அந்நாட்டு அரசு தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply