பாகிஸ்தானில் பிரான்ஸ் நாட்டு பெண்ணை கற்பழித்த 2 பேருக்கு மரண தண்டனை
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக அண்மை காலமாக அங்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பஞ்சாப் மாகாணம் லாகூர் நகரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை அவரது குழந்தைகள் கண் முன்னே 2 பேர் கற்பழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானில் பிறந்து பிரான்சில் குடியேறி அந்த நாட்டின் குடியுரிமையை பெற்ற அந்த பெண் தனது உறவினர்களை பார்ப்பதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லாகூர் வந்தார்.
செப்டம்பர் 9-ந் தேதி அந்த பெண் தனது 2 குழந்தைகளுடன் லாகூரில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் பெட்ரோல் இல்லாமல் கார் நின்று போனது.
இதையடுத்து அந்த பெண் செல்போனில் தனது உறவினரை தொடர்பு கொண்டு உதவி கேட்டார். அதன் பேரில் அவருக்கு உதவ உறவினர்கள் உடனடியாக புறப்பட்டனர்.
இதற்கிடையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆண்கள், காருக்கு அருகே நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்தனர்.
இதில் அவர் ஆண் துணையின்றி குழந்தைகளுடன் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட அந்த நபர்கள், அந்தப் பெண்ணை மிரட்டி நகை, பணம் உள்ளிட்டவற்றை பறித்தனர்.
அந்த இளம் பெண்ணும் உயிருக்கு பயந்து அவர்கள் கேட்ட அனைத்தையும் கொடுத்து விட்டார்.
ஆனால் அவர்கள் அதோடு நிற்கவில்லை. அந்த இளம்பெண்ணை அருகில் உள்ள ஒரு வயல்வெளிக்கு தூக்கிச் சென்று குழந்தைகளின் கண்முன்னே அவரை கற்பழித்தனர். அதன் பின்னர் அவர்கள் இருவரும் நகை, பணத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அந்த இளம் பெண்ணின் உறவினர்கள் லாகூர் போலீசில் உடனடியாக புகார் அளித்தனர். அதன் பேரில் வழிப்பறி மற்றும் கற்பழிப்பில் ஈடுபட்ட ஆபிட் மல்கி மற்றும் ஷப்கத் அலி பாகா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த பெண் ஏன் குழந்தைகளுடன் தனியாக சென்றார்? புறப்படுவதற்கு முன்பு காரில் பெட்ரோல் உள்ளதா என்பதை ஏன் பார்க்கவில்லை? என அந்த பெண் மீது குற்றம் சாட்டுவது போலவே பேசினார்.
அதிகாரியின் இந்தப் பேச்சு கற்பழிப்புக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு வித்திட்டது.
கற்பழிப்பு போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனக்கோரி நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக விசாரிக்கவும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும் வகை செய்யும் புதிய சட்டம் இயற்றப்பட்டது.
இந்த நிலையில் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய லாகூர் கற்பழிப்பு வழக்கின் இறுதி விசாரணை லாகூர் சிறப்பு கோர்ட்டில் நேற்று நடந்தது. இதில் ஆபிட் மல்கி மற்றும் ஷப்கத் அலி பாகா ஆகியோர் மீதான கற்பழிப்பு, கடத்தல், வழிப்பறி மற்றும் பயங்கரவாத செயல் உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. அடுத்து அவர்கள் இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply