வெறும் கூட்டு பலன் தராது
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகத் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தங்களுடன் கூட்டுச் சேர வேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார். மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதனுக்கான அனுதாபப் பிரேரணை மீது பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இந்த அழைப்பை அவர் விடுத்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களும் இவ்வாறான கருத்துகளை அண்மைக் காலத்தில் தெரிவித்திருக்கின்றார்கள்.
தமிழ்க் கட்சிகளுக்கிடையே கூட்டு ஏற்படுவது புதிய விடயமல்ல. முதலில் தடபுடலான ஆரவாரங்களுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி அமைந்தது. பின்னர் அரங்குக்கு வந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இக் கூட்டுகளின் தோற்றம் அந்தந்தக் காலங்களில் தமிழ் மக்களிடையே மிகுந்த நம்பிக்கையைத் தோற்றுவித்த போதிலும் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு விரைவில் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களிடம் தோற்றுவித்தன. மக்களின் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இரண்டு கூட்டுகளினதும் தோற்றம் தலைவர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்ததைத் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை.
தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு இரண்டு கூட்டுகளும் தாராளமாகப் பங்களிப்புச் செய்திருக்கின்றன. எத்தனை கட்சிகள் கூட்டுச் சேர்ந்தாலும் சரியான கொள்கையும் சரியான அணுகுமுறையும் இல்லையென்றால் அக் கூட்டினால் எவ்வித பலனும் ஏற்படாது என்பதற்கு இவ்விரு கூட்டுகளும் பொருத்தமான உதாரணம்.
இனப்பிரச்சினையின் தீர்வுக்காகத் தங்களுடன் கூட்டுச் சேருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் அழைப்பு விடுக்கின்ற போதிலும் தீர்வுத்திட்டம் எதுவும் இதுவரை அவர்களிடம் இல்லை. விரைவில் தீர்வுத் திட்டத்தைத் தயாரித்து வெளியிடப்போவதாகக் கூறியிருக்கின்றார்களே யொழிய இதுவரை அத் தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்கவில்லை.
கைவசம் தீர்வு இல்லாத நிலையில் மற்றைய கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதில் அர்த்தமில்லை. தீர்வுத் திட்டத்தைப் பொறுத்த வரையில் மாத்திரமன்றி அதை அடைவதற்கான அணுகு முறையைப் பொறுத்த வரையிலும் உடன்பாடு இல்லாமல் கூட்டுச் சேர்வது பலனளிக்கப்போவதில்லை.
இன்று தமிழ் மக்களுக்கு நேர்ந்திருக்கும் சகல அவலங்களுக்கும் புலிகளுடன் சம அளவில் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. தவறுகளைப் பகிரங்கமாக ஒத்துக் கொள்ளாமல் மீண்டுமொரு கூட்டுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையானது, அழிவுகரமான பழைய பாதையிலிருந்து விலகிப் புதிய பாதையில் பயணிப்பதற்குத் தயாராக உள்ளதென்பதைக் கூட்டமைப்பு சந்தேகத்துக்கு இடமின்றி வெளிப்படுத்தாத வரை மற்றைய கட்சிகள் இதன் அழைப்பை அக்கறையுடனான பரிசீலனைக்கு உட்படுத்தப் போவதில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்க் கட்சிகளுக்கு மாத்திரம் அழைப்பு விடுக்கின்றது. இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண்பதில் தென்னிலங்கை முற்போக்கு சக்திகளின் பங்களிப்பும் அவசியமானதென்பதைக் கூட்டமைப்புத் தலைவர்கள் புரிந்துகொள்ளாமலிருப்பது துரதிஷ்டமானது.
இதுவரை முன்வைக்கப்பட்ட தீர்வுகளுள் பொதுசன ஐக்கியமுன்ன ணியின் தீர்வுத்திட்டமே சிறப்பானதென்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வர். தென்னிலங்கை முற்போக்கு சக்திகளின் பங்களிப்பு அத் தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பதில் முக்கியமானதாக இருந்ததென்பதை இங்கு குறிப்பிட்டுக்கூறலாம்.
வெறும் கை முழம் போடாது என்பர். அதே போல, வெறும் கூட்டு பலன் தராது. தெளிவான கொள்கையும் சரியான அணுகு முறையும் வேண்டும். அத்தோடு கருத்தீடுபாடுள்ள அனைவரையும் அணைத்துக் கொள்ளவும் வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply