பயங்கரவாதத்தை வெற்றிகொண்டதுபோல் அபிவிருத்தி யுத்தத்திலும் வெற்றி பெறுவோம்: ரத்னசிறி விக்கிரமநாயக்க
பயங்கரவாதத்தை வெற்றிக் கொண்டது போன்று அபிவிருத்தி யுத்தத்தையும் வெற்றிக்கொள்வோம் என்று பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். பயங்கரவாதம் முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளதால் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளில் படைவீரர்கள் முழுமையாக ஈடுபடுத்தப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.தற்பொழுது எம்மத்தியிலுள்ளது அபிவிருத்தி யுத்தம், இதனை பயங்கரவாதத்தை வெற்றிக்கொண்டது போன்று படைவீரர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் வெற்றிக்கொள்வோம் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தியத்தலாவை இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிகளை முடித்து வெளியேறும் இராணுவ வீரர்களின் அணி வகுப்பு வைபவம் கடந்த சனிக்கிழமை தியத்தலாவையில் இடம்பெற்றது. இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, தியத்தலாவை இராணுவப் பயிற்சி கல்லூரியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் எம். டி. கே. பெரேரா உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்ட இந்த வைபவத்தில் பிரதமர் மேலும் உரையாற்றுகையில், எமது தாய் நாட்டையும் எமது கலாசாரத்தையும் பாதுகாப்பது படைவீரர்களின் பொறுப்பாகும். சகல சந்தர்ப்பங்களிலும் ஆக்கிரமிப்புக்களை தோற்கடித்து இந்த நாட்டை எமது படைவீரர்கள் பாதுகாத்துள்ளனர்.
பிரபாகரனின் பயங்கரவாத செயற்பாடுகளினால் எமது நாடு 30 வருடங்கள் பின் தங்கச் சென்றது. பிரபாகரன் எமது நாட்டின் அரச முக்கியஸ்தர்கள், படைவீரர்கள் மற்றும் சாதாரண அப்பாவி மக்களை படுகொலை செய்தார். உலகத்திலேயே மிகப் பெரிய பயங்கரவாதியாக கருதப்பட்ட பிரபாகரன் உட்பட சகலரையும் இல்லாதொழிக்க எமது படைவீரர்களால் முடிந்தது.
இந்த நாட்டிலுள்ள ஒரு பகுதி மக்களுக்கு அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மக்களை படுகொலை செய்யும் இராணுவம் எம்மிடமில்லை. எமது படைவீரர்கள் உலகிலேயே சிறந்த வீரர்களாகவும் மிகவும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் உள்ளனர்.
காட்டு நீதியை நடைமுறைப்படுத்தவோ ஜனநாயகத்துக்கு பங்கம் ஏற்படுத்தவோ இனி ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். அபிவிருததி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்பந்தக்காரர்கள் மூன்று வருடங்கள் எடுப்பர். ஆனால் எமது படைவீரர்கள் அதே நடவடிக்கைகளை சில தினங்களில் செய்து முடிப்பர்.
தாய்நாட்டின் கெளரவத்தையும் தாயின் கெளரவத்தையும் பாது காப்பது இன்று பயிற்சி முடித்து வெளியேறும் ஒவ்வொரு படை வீரர்களினதும் பொறுப்பாகும். எனவே எமது தாய் நாட்டை பாதுகாக்க தொடர்ந்தும் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார். இரண்டு வருட கால பயிற்சிகளை முடித்துக்கொண்ட 5 பிரிவுகளைச் சேர்ந்த 281 படை அதிகாரிகள் 2ம் லெப்டினன்ட்களாக வெளியேறினார்கள். தியத்தலாவை இராணுவப் பயிற்சி கல்லூரியின் வரலாற்றில் 281 வீரர்கள் வெளியேறியது இதுவே முதற்தடவையாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply