ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணையை பெற்ற பின்னரே இறுதித் தீர்வு

ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மக்களின் ஆணையைப் பெற்ற பின்னரே இனப்பிரச்சினைக்கு இறுதி அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சஷ்டி அடிப்படையில் தீர்வொன்று முன்வைக்கப்படுமெனக் கூறப்படும் கருத்துக்களை மறுத்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பல்லின சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கமொன்றை ஏற்படுத்த வேண்டியதே தற்போதைய தேவையாக இருப்பதாகவும் கூறினார்.

அதேநேரம், இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றிப், பாதுகாப்பான சூழ்நிலையை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்தியாவின் ‘த ஹின்டு’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த மக்கள் மீள் குடியமர்த்தப்படுவதற்கு முன் அவர்களின் இடங்களில் குடியிருப்பதற்கான மின்சாரம், வீதி, நீர்வினியோகம் உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படவேண்டும். அத்துடன் இந்த மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட மிதிவெடிகள் உள்ள இவை அனைத்தும் அகற்றப்படவேண்டியுள்ளது. இவை அகற்றப்படாது மக்கள் குடியமர்த்தப்பட்டு அவர்களுக்கு இதனால் அனர்த்தங்கள் ஏற்படும்போது அதற்கு பொறுப்பு கூறவேண்டியது நானகவே உள்ளேன்.

 மோதல்களின் பின்னரான புனரமைப்புகள் மற்றும் மீள்கட்டுமானப் பணிகள் எந்தவிதமான இனவேறுபாடுகளுமின்றி முன்னெடுத்துச் செல்லப்படுமெனவும், இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் நலன்புரி நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்தவையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நலன்புரி நிலையங்களில் குறைப்பாடுகள் உண்டு என்பது எமக்குத் தெரியும். மிகவும் விரைவான வேகத்தில் அவற்றை நாம் நிவர்த்திசெய்து வருகின்றோம். சில முகாம்களில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை” என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பாதுகாப்புக் காரணிகள் இருப்பதால் கண்ணிவெடி அகற்றும் பணிகளை உடனடியாக மேற்கொண்டு, மீள்குடியேற்றங்களைத் துரித கதியில் மேற்கொள்வது சாத்தியமற்றது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அடிப்படை வசதிகள் எதனையும் ஏற்படுத்தாத நிலையில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பகுதிகளுக்கு அனுப்பமுடியாதெனவும் தெரிவித்தார்.

13வது திருத்தத்துக்கு அப்பால்

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தத்தை நாளை அமுல்படுத்துவதற்குக் கூடத் தான் தயாரென ஹின்டு பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக்காட்டிய அவர், எனினும், மக்களின் அனுமதியைப் பெற்ற பின்னரே அதனை அமுல்படுத்தத் தீர்மானித்திருப்பதாகவும் கூறினார்.

அரசியல் தீர்வு தொடர்பாக ஆராயும் கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே இறுதித் தீர்வொன்றை முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாகக் கூறினார்.

“இனப்பிரச்சினைத் தீர்வாக எதனைக் கொடுக்கவேண்டும், எதனைக் கொடுக்கக் கூடாது என்பது எனக்கு நன்கு தெரியும். மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளனர். அதனை நான் பயன்படுத்தவுள்ளேன். ஆனாலும், ஏனையவர்களின் (கூட்டமைப்பினர்) இணக்கப்பாடும் கிடைக்கப்பெறவேண்டும். சமஷ்டி முறையிலான தீர்வுக்கு வாய்ப்பு இல்லை” என்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply