யாழ். மாநகர முதல்வர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது
யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சட்டத்தரணி வி.மணிவண்ணன் மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் இருவரும் நேற்றிரவு 8 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்.
இருவரிடமும் இன்று அதிகாலை 2 மணிவரை வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் பின்னர் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இலங்கை பொலிஸுக்கு ஒத்ததாக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை அமைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடையை அணிந்திருந்தனர் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் நேற்று முன்தினமிரவு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு பல மணி நேரம் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படையின் கடமைகளை இடைநிறுத்துமாறு பொலிஸாரால் பணிக்கப்பட்டது.
காவல் படைக்கு வழங்கப்பட்ட சீருடைகளும் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டதுடன், கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
மாநகர சபை ஆணையாளர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த காவல் படைக்கான சீருடை உள்ளிட்டவற்றை ஒழுங்கு செய்தமை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபனிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply