நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி எதிர்காலம்.
வன்னியிலிருந்து வந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்கள் மத்தியில் மாணவர்களும் கணிசமான எண்ணிக்கையினராக உள்ளனர். இம் மாணவர்களின் கல்வியில் எவ்வித தடங்கலும் இருக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் அதிக அக்கறை செலுத்துகின்றது. வன்னியில் இருந்த காலத்தில் இம் மாணவர்களின் கல்விச் செயற்பாடு தடையற்றதாக இருக்கவில்லை.
புலிகள் மாணவர்களை அடிக்கடி பயிற்சிக்காகக் கூட்டிச் செல்லும் வழக்கம் வன்னியில் முன்பு இருந்தது. நிவாரணக் கிராமங்களில் இம் மாணவர்களின் கல்வி தடையின்றித் தொடர்கின்றது. அவர்களுக்குரிய பாடப் புத்தகங்களும் சீருடைத் துணிகளும் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு விட்டன. இடம் பெயர்ந்து வந்த ஆசிரியர்கள் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்குப் பொறுப்பாக உள்ளனர்.
நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மாணவர்களுள் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கும் ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சைக்கும் தோற்றவுள்ள மாணவர்களும் அடங்குவர். க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு 856 மாணவர்களும் புலமைப் பரிசில் பரீட்சைக்கு 6000 மாணவர்களும் தோற்றவுள்ளனர். இவ்விரு பரீட்சைகளும் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளன.
இவ்விரு பரீட்சைகளுக்கும் தோற்றவுள்ள மாணவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துடன் அண்மையில் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்ற பரீட்சைகள் ஆணையாளர் இவ்விரு பரீட்சைகளுக்குமான பழைய வினாப் பத்திரங்களை இம் மாணவர்களுக்கு விநியோகித்திருக்கின்றார்.
இது மாணவர்களின் மீட்டல் செயற்பாட்டுக்குப் பெரிதும் துணையான இருக்கும். அடையாள அட்டை இல்லாதவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக விசேட அடையாள அட்டைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் பரீட்சைகள் ஆணையாளர் செய்திருக்கின்றார்.
இரண்டு பரீட்சைகளுக்கும் தோற்றும் மாணவர்களுக்கான மீட்டல் வகுப்புகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளைப் பிரதிக் கல்வி அமைச்சர் செய்கின்றார். கொழும்பில் முன்னணிப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் சேவை இந்த மீட்டல் வகுப்புகளுக்காகப் பெறப்படவுள்ளது.
ஒரு சமூகத்தின் எதிர்காலம் அச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது எனக் கூறுவர். இந்த வகையில் வன்னி மாணவர்களின் நலனில் அரசாங்கம் காட்டும் அக்கறை அச்சமூகத்தின் எதிர்கால சிறப்புக்கான அக்கறையே என்பதில் சந்தேகமில்லை.
நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிரான அபாண்டப் பிரசாரத்தில் சில சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன. இம் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் இடம் பெயர்ந்த மக்கள் கைதிகள் போல நடத்தப்படுகின்றார்கள் என்றும் இவர்கள் பிரசாரம் செய்கின்றார்கள். சில வெளிநாட்டு அமைப்புகளும் இப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றன.
இவர்கள் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்று அங்கு நடப்பவற்றை நேரில் பார்க்காதவர்கள். அரசாங்கத்துக்கு எதிரான உணர்வலையை வளர்க்க வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துடனேயே இத்தகைய அபாண்டப் பிரசாரங்களில் இவர்கள் ஈடுபடுகின்றார்கள்.
உலகில் வேறெந்த நாட்டிலும் இடம் பெயர்ந்தவர்களுக்கு இல்லாத வசதிகள் நிவாரணக் கிராமங்களில் செய்து கொடுக்கப்படுவதாக அங்கு நேரில் சென்று நிலைமையை அவதானித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் கூறியிருப்பதை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பர். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக ஐக்கிய மக்கள் சுதந்தி்ர முன்னணி அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சோற்றுப்பதம் எனலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply