நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் லாரி வெடித்து சிதறி 12 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பெனூ மகாணத்தில் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.இந்த லாரி ஓஷிக்புடு என்ற கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் சாலையில் தறிகெட்டு ஓடிய லாரி கிராமத்துக்குள் புகுந்து கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த எண்ணெய் முழுவதும் தரையில் கொட்டியது. இதனால் டேங்கர் லாரியில் தீ பிடித்து வெடித்துச் சிதறியது. இந்த தீ அருகில் உள்ள வீடுகளிலும் கடைகளிலும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதில் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்த பலர் தீயில் சிக்கினர். இந்த கோர சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி ஒரு பச்சிளம் குழந்தை, 3 பெண்கள் உட்பட 12 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இதுபற்றி தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply