கணவர் மறைவுக்கு பிறகு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி கூறிய ராணி எலிசபெத்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் கடந்த 9ம் தேதி காலமானார். கடந்த சனிக்கிழமை அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. தேவாலயத்தில் நடந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் குடும்பத்தினர் என 30 பேர் மட்டுமே பங்கேற்றனர். பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இன்னும் சில மாதங்களில் இளவரசர் பிலிப்பின் 100வது பிறந்த நாளை கொண்டாட அரச குடும்பத்தினர் ஆயத்தமாக இருந்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே இளவரசர் மறைந்துவிட்டார். இது அரச குடும்பத்திற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நேற்று 95வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அவருக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

ராணி தனது பிறந்தநாளையொட்டி தனது சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தன் கணவர் இளவரசர் பிலிப் மறைவைத் தொடர்ந்து, ஆதரவு அளித்து அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

‘பிரிட்டன், காமன்வெல்த் நாடுகள் மற்றும் உலகெங்கிலும் இருந்து, என் கணவருக்கு செலுத்திய அஞ்சலிகளை பார்த்ததும், கேட்டதும் மிகவும் ஆறுதலாக இருந்தது. எங்களுக்கு அளித்த ஆதரவு மற்றும் அன்பிற்கு எனது குடும்பத்தினரும் நானும் நன்றி தெரிவிக்கிறோம்.

பிலிப்பின் நினைவுகள் ஆழமாக பதிந்துள்ளன. பிலிப் தன் வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற மக்கள் மீது இத்தகைய அசாதாரண தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை தொடர்ந்து நினைவுபடுத்துங்கள். எனது பிறந்தநாளுக்காக பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களை மிகவும் பாராட்டி நன்றி தெரிவிக்கிறேன்’ என ராணி கூறி உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply