வட்டுக்கோட்டை தவறான தீர்மானம் காரணமாகவே இத்தனை பேரழிவுகள்
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள், அண்மையில் (21.06.2009) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு, வடக்கு கிழக்கில் நிலவும் நிலைமைகள் குறித்து மிக அருமையான கடிதம் ஒன்றை எழுதியிருந்ததை, ‘தேனீ’ இணையத்தளம் மூலமாக வாசித்து மகிழ்ச்சி அடைந்தேன். புலிகளின் எதேச்சாதிகாரப் பிடியில் இருந்து தமிழ்மக்கள் அரசாங்கத்தால் மீட்கப்பட்ட நிலையில், சில ‘குட்டிப் புலிகளின்’ பிடியில், மீண்டும் தமிழ் மக்கள் சிக்குவதை எந்தக்காரணம் கொண்டும் நாம் அனுமதிக்கக் கூடாது. அந்த விடயத்தில் ஆனந்தசங்கரி அவர்களின் கருத்துடன, உண்மையான ஜனநாயகவாதிகள் ஒத்துப்போவார்கள் என்பதில் ஐயமில்லை.
ஆனால் ஒரு நெருடலான விடயம் என்னவெனில், தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை கொண்டுவருவதற்கு ஆனந்தசங்கரி தான் மட்டும் தன்னந்தனியனாக நின்று போராடியதாக திரும்ப திரும்ப தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளமை தான். அந்தக் கருத்துடன் மட்டும் எம்மில் பலருக்கு அவருடன் ஒத்துப்போக முடியாமல் உள்ளது. ஏனெனில் ஆயிரக்கணக்கான முற்போக்குவாதிகள், ஜனநாயகவாதிகள் என்போர் அந்த நோக்கை அடைவதற்காக, பல துன்பங்கள், தியாகங்கள் மத்தியில் போராடி வந்துள்ளார்கள். அவர்களில் பலருக்கு, ஆனந்தசங்கரி அவர்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள பாதுகாப்பு போன்ற எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை. அதன் காரணமாக அவர்களில் பலர் புலிகளால் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக விடுதலையான சிலர், புலிகளின் எதேச்சாதிகாரத்துக்கு எதிராக இன்றுவரை உறுதியுடன் போராடி வந்துள்ளனர். இந்த விடயத்தில் ஆனந்தசங்கரி அவர்கள் யாரோ சிலரை மனதில் வைத்துக்கொண்டு, தமிழ் மக்களின் ஜனநாயகத்திற்காக போராடிக்கொண்டிருக்கின்ற எல்லோரையும் ஏகத்துக்கு இருட்டடிப்பு செய்வது சரியானதல்ல.
இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில், திரு.ஆனந்தசங்கரி முன்னர் பிரபாகரனுக்கும், தற்பொழுது ஜனாதிபதிக்கும் எழுதியுள்ள பல கடிதங்களில், முன்னவருக்கு எதேச்சாதிகாரத்தை கைவிடும்படியும், பின்னவருக்கு தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும்படியும் பல வேண்டுகோள்கள் விடுத்து வந்திருந்தபோதிலும், ஒரு முக்கியமான விடயத்தை அவர் இதுவரை தெளிவுபடுத்த தவறி வந்துள்ளார். அதாவது அவர் இன்று தலைமை வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிதான், 1976ல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரேயொரு தீர்வாக ‘தனித் தமிழீழம்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த தவறான தீர்மானம் காரணமாகவே, ஆயுதப்போராட்டம் உருவாகி, இத்தனை பேரழிவுகளும் ஏற்பட்டன. அந்த தீர்மானம் தவறு என்பதை வரலாறு இன்று ஐயம்திரிபுற நிரூபித்துவிட்டது. இந்த சூழ்நிலையில் ‘தமிழீழ’ தீர்மானத்தை தாம் கைவிட்டுவிட்டதாக, தமிழர் விடுதலைக் கூட்டணி ஏன் இன்னமும் அறிவிக்கவில்லை?
உண்மையில் ஆனந்தசங்கரி அவர்கள் இன்று உடனடியாக செய்ய வேண்டியதெல்லாம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாடு ஒன்றைக் கூட்டி, தமது முன்னைய தவறான தமிழீழ தீர்மானத்தை வைவிடுவதாக பகிரங்கமாக அறிவிப்பதுதான். புலிகள் அமைப்பு இலங்கையில் இராணுவ ரீதியாக முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்ட நிலையில், புலிகளின் சர்வதேசத் தலைமை புலம்பெயர் தமிழீழ அரசொன்றை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது. தமிழ் மக்களுக்கு மேலும் நாசம் விளைவிக்கக்கூடிய புலத்து புலிகளின் இந்த அறிவிப்பிலிருந்து, புலிகளின் முன்னைய பினாமி அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பே தன்னை விலக்கி வைத்துள்ள நிலையில், புலிகளுக்கு எதிராக தொடர்ச்சியாகவும், விசுவாசத்துடனும் போராடி வந்துள்ள ஆனந்தசங்கரி அவர்கள், அந்த தவறான தீர்மானத்தை கைவிடுவதாக இன்னமும் அறிவிக்காமல் இருப்பது, எதிர்காலத்தில் மேலும் பல விபரீதங்களுக்கு வழி வகுக்கலாம். எனவே இனியும் காலம் தாழ்த்தாது, ஆனந்தசங்கரி அவர்கள் விரைந்து செயற்பட்டு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டை ‘தனித் தமிழீழம்’ தொடர்பான தற்போதைய நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்பது காலத்தின் கட்டாய தேவையாகும்.
– வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்) – தேனீ இணையம்
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply