கரொலைன் அந்தோனிப் பிள்ளை

இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் மூத்த பரம்பரையினரில் இறுதியாக உயிரோடு இருந்தவரான கரொலைன் அந்தோனிப்பிள்ளை கடந்த திங்கட்கிழமை மரணமடைந்தார். இறக்கும் போது அவருக்கு 101வது. சென்றவருடம் ஒக்ரோபர் 8ந் திகதி நூறு வயதுப் பூர்த்தியை அவர் கொண்டாடினார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் தமக்கென அழியாத இடம் பதித்த பொரளுகொட வளவு வாரிசுகளுள் ஒருவரே கரோலைன். பிலிப் குணவர்தன, றொபேட் குணவர்தன ஆகியோரின் இளைய சகோதரியான கரோலைன் இளம் வயதிலேயே தீவிரமான அரசியலில் ஈடுபடத் தொடங்கியவர்.

கரொலைன் லங்கா சமசமாஜக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர், லங்கா சமசமாஜக் கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொங்கிவிட்டார். இலங்கையின் முதலாவது சட்டசபைத் தேர்தல் 1931ம் ஆண்டு நடைபெற்றது. அத்தேர்தலில் கரொலைனின் மூத்த சகோதரர் ஹரி குணவர்தன அவிசாவலைத் தொகுதியில் போட்டியிட்டார். அவரது தேர்தல் பிரசார வேலைகளில் கரொலைன் தீவிரமாக ஈடுபட்டார்.

மியூஸியஸ் கல்லூரியில் கல்வியை முடித்துக் கொண்ட பின் கரொலைன் அவிசாவலை சித்தார்த்த வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணி புரியத் தொடங்கினார். ஆசிரியப் பணியுடன் அரசியல் பணியும் தொடர்ந்தது. லங்கா சமசமாஜக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகப் பிற்காலத்தில் விளங்கியவரும் கொழும்பு வடக்கு, பொரளை இரத்மலானை ஆகிய தொகுதிகளைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தியவருமான விவியன் குணவர்தன கரோலைனின் பெறாமகள். விவியனை அரசியலுக்குக் கொண்டு வருவதில் கரோலைன் முக்கிய பாத்திரம் வகித்தார்.

பொரளுகொட வளவின் வாரிசுகள் எல்லோரும் துணிச்சல் மிக்கவர்கள். கரோலைன் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவில் கணவன் சிறைப்பட்ட காலத்தில் அவரது தொழிற் சங்கத்துக்குத் தலைமையேற்றுச் செயற்பட்ட போது கரோலைனின் துணிச்சல் வெளிப்பட்டது. அந்தக் காலத்தில் சென்னையில் பல வேலைநிறுத்தங்களை இவர் வெற்றிகரமாக நடத்தினார்.

முப்பதுகளின் பிற்பகுதியில் எஸ்.சீ.சீ. அந்தோனிப்பிள்ளை லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்து தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்டார். தமிழராகிய இவருக்குச் சிங்களம் போசவராததால் ஆசிரியையான தனது தங்கை கரோலைனிடம் சிங்களம் படிப்பதற்கு பிலிப் குணவர்தன ஏற்பாடு செய்தார். இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. அந்தோனிப்பிள்ளை தமிழ்க் கிறிஸ்தவர்.

கரோலைன் சிங்கள பெளத்தர். கரோலைன் அந்தோனிப் பிள் ளையிலும் பார்க்க ஆறு வயது மூத்தவர். இவ்வாறான வேறுபாடுகளுக்கு மத்தியிலும் நெருக்கமாகக் காதல்வயப்பட்ட இவர்கள் 1939ம் ஆண்டு திருமணம் செய்தனர். திருமணத்துக்கு பின் இருவரும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

‘நாற்பதுகளின் முற்பகுதியில் லங்கா சமசமாஜக் கட்சி தடை செய்யப்பட்டதும் பல தலைவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர். அந்தோனிப்பிள்ளை சென்னையில் தங்கினார். அப்போது கரொலைன் இரண்டு பிள்ளைகளுடன் இலங்கையில் தங்கியிருந்தார். சிறிது காலத்தின் பின் பிள்ளைகளுடன் அவர் இந்தியாவுக்குச் சென்றார்.

சென்னையில் இருவரும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அந்தோனிப்பிள்ளை படிப்படியாக வளர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைப் பதவிக்குத் தெரிவாகினார். இந்திய பாராளுமன்ற உறுப்பி னராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார்.

2000ம் ஆண்டு அந்தோனிப்பிள்ளை காலமாகியதும் கரோலைன் இலங்கைக்குத் திரும்பினார்.

– தினகரன்

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply