நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள 14,000 பேர் உடல், உள ரீதியில் பாதிப்பு

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களில் சுமார் 14,000 பேர் உடல் மற்றும் உள ரீதியில் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று சமூக சேவைகள் மற்றும் சமூக நலம்பேணல் அமைச்சு தெரிவித்தது. வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நலன்புரி முகாம்களில் தற்போது 2,78,131 பொதுமக்கள் இடம்பெயர்ந்த நிலையில் தங்கியுள்ளனர். அவர்களில் சுமார் 2,800 பேர் வடக்கில் இரு தரப்புக்குமிடையில் இடம்பெற்ற மோதல்களின் போது அங்கவீனமடைந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

பிறப்பிலேயே அங்கவீனமடைந்த நிலையில் சுமார் 3,968 பேர் இந்த தற்காலிக முகாம்களில் வசித்து வருவதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள் குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த பொதுமக்களில் பலர் கை, கால்களை இழந்த நிலைகளிலேயே காணப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மக்களுக்கு செயற்கை கை, கால்கள் மற்றும் கைத்தடிகள் போன்ற நிவாரண உபகரணங்கள் தேவைப்படுகின்றன என்று சமூக சேவைகள் மற்றும் சமூக நலம்பேணல் அமைச்சு தெரிவித்தது.

மேற்படி நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள அங்கவீனமடைந்த பொதுமக்களுக்காக சக்கர நாற்காலிகள் – 500, கைத்தடிகள் – 400, ஆகியவற்றை கேட்டுள்ளதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலம்பேணல் பிரதி அமைச்சர் லயனல் பிரேமசிறி தெரிவித்தார்.

இந்நிலையில் இம்மக்களுக்குத் தேவையான சக்கர நாற்காலிகள் – 460, கைத்தடிகள் – 375, ஊன்றுகோல்கள் – 400 போன்றவற்றை எதிர்வரும் 18ஆம் திகதி வவுனியாவிலுள்ள நலன்புரி மகாம்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, குறித்த ஊன்றுகோல்கள், கைத்தடிகள் மற்றும் செயற்கை கை, கால்கள் போன்றவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க எண்ணுபவர்களுக்கு அமைச்சு சந்தர்ப்பம் வழங்கியுள்ள என்றும் அவர் மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply