வடக்கு, கிழக்கு மாணவர் 30வருட காலம் இழந்ததை மீளப்பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பாடு: ஜனாதிபதி
வடக்கு, கிழக்கு மாணவர்கள் கடந்த 30 வருட காலமாக இழந்தவற்றை மீளப்பெற்றுக் கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மீளக் கிடைத்த பிரதேசங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அபிவிருத்தியைப் போல், கல்வியையும் விளையாட்டையும் சமமாக மேம்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.வடக்கு கிழக்குப் பகுதிகளில் மறைந்து கிடக்கும் திறமைகளைத் தேடி வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதென்றும் நேற்று மாலை பிலியந்தலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி தெரிவித்தார்.
பிலியந்தலை மத்திய மகா வித்தியாலயத்தை விளையாட்டு வித்தியாலயமாக மேம்படுத்தும் நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றிய ஜனாதிபதி, நமது பிள்ளைகள் காலை முதல் மாலை வரை பாடசாலை சென்று களைத்துப் போய் வீடு திரும்புகிறார்கள். அவர்களின் கல்வியை மாத்திரமன்றி உடற் சுகாதாரத்தையும் உள்ளத்தையும் பெற்றோர் கவனிக்க வேண்டும்.
தென் பகுதி மாணவர்கள் புத்தகம் ஏந்திச் செல்கையில் வடக்கு கிழக்கு மாணவர்கள் 30 வருடமாகத் துப்பாக்கி ஏந்தினார்கள். அவர்கள் இழந்தவற்றை மீளப் பெற்றுக் கொடுக்க வேண்டியது நமது கடமையாகும். அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார். பிலியந்தலை மத்திய மகா வித்தியாலயம் முழுமையான விளையாட்டு வளங்களைக் கொண்ட பாடசாலையாக மேம்படுத்தும் நிகழ்வு நேற்று (09) மாலை நடைபெற்றது. சர்வதேச தரத்திலான 50 மீற்றர் நீச்சல் தடாகத்தை நிர்மாணிக்கும் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கெஸ்பாவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரான விளையாட்டுத் துறை அமைச்சர் காமினி லொக்குகேயின் அழைப்பின் பேரில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நீச்சல் தடாக நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். கொழும்புக்கு வெளியில் இவ்வாறு சர்வதேச தரத்திலான நீச்சல்தடாகம், விளையாட்டு மைதானம் அமைவது முதற் தடவையாக பிலியந்தலை மத்திய மகா வித்தியாலயத்தில் என்பது குறிப்பிடத்தக்கதாகும். வித்தியாலயத்தின் புதிய வளங்களைப் பறைசாற்றும் நினைவுப் படிகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திரைநீக்கம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில்,
இன்று இந்த விளையாட்டுப் பாடசாலையானது, கல்வி அமைச்சும் விளையாட்டுத் துறை அமைச்சும் இணைந்து இலங்கையில் உருவாக்கும் மூன்று பாடசாலைகளில் முதலாவது பாடசாலையாகும். பெலலன்வில தேரரும், கல்வி அமைச்சரும் கல்வித் துறை மேம்பாடு தொடர்பாக உரையாற்றினர். இன்று நாம் எந்தவிதமான கஞ்சத்தனமும் இல்லாமல் 31 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்துள்ளோம். இராணுவத்துக்கும், ஆசிரிய தொழிலுக்கும் மாத்திரமே கூடுதலானோரை நியமிக்க அனுமதியளித்தோம். ஆசிரியர்களை நியமித்தலுடன் நின்றுவிடாது கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றோம்.
பாடசாலைகள் மேம்படுவதற்கு விளையாட்டுத் துறையை மேம்படுத்துவது அவசியம். பிள்ளைகளை கல்விக்கு ஊக்கமளிக்கும் அதே நேரம் அவர்களை பெற்றோர்கள் விளையாட்டுத் துறையிலும் ஈடுபடுத்த வேண்டும். மாணவர்கள் குழுக்களாக செயற்படுவதற்கு விளையாட்டு அத்தியாவசியம். வெறும் புத்தகப் பூச்சிகளை உருவாக்குவதால் எந்தப் பயனும் இல்லை.
இன்று பெற்றோர்களுக்கு அச்சம் இல்லாது செய்யப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் மறைந்து கிடக்கும் வளங்களைத் தேடிச் செல்லும் தருணம் பிறந்துள்ளது. 30 வருடங்களாக இல்லாமற் போனதை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டியது எமது கடமையாகும்.
துள்ளி விளையாட வேண்டிய குழந்தைகளின் கரங்களில் துப்பாக்கிகளைக் கொடுத்தார்கள். துப்பாக்கிகளைக் கழற்றிப் பூட்டக்கூடிய 11, 12 வயது பிள்ளைகள் இன்று முகாம்களில் இருக்கிறார்கள. இவர்கள் அனைவரும் இழந்தவற்றை மீளப்பெற்றுக் கொடுப்போம். எதிர்வீரசிங்கம் போன்ற விளையாட்டு வீரர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் உருவானார்கள். அவ்வாறானவர்களை மீண்டும் நாம் உருவாக்குவோம். அபிவிருத்தியை ஒரு பகுதிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்வோம் என்றார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் உரையாற்றுகையில்,
நாட்டின் கஷ்டப் பிரதேசங்களில் உள்ள 175 பாடசாலைகளைத் தேர்ந்தெடுத்து சகல வசதிகளையும் கொண்டதாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒவ்வொரு பாடசாலைக்கும் மூன்றரை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கின்றோம. வடக்கின் வசந்தத்தின் கீழ் 30 பாடசாலைகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இதற்கென 1050 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடசாலைகள் அனைத்தையும் ஐந்தாண்டுகளில் அபிவிருத்தி செய்யவென 110 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெல்லன்வில நாயக்க தேரர் குறிப்பிட்டதைப் போல், புதிய கல்விக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. பாடசாலை தரப்படுத்தல் தொடர்பான புதிய முறையும் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து 31 ஆயிரம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தமாக 2 இலட்சத்து 18 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். நாடு முழுவதும் 9723 பாடசாலைகளில் பயிலும் 40 இலட்சம் மாணவர்களுக்கு இவர்கள் கற்பிக்கின்றனர். அபிவிருத்தியடைந்த நாடுகளுக்குச் சமமாக எமது நாட்டில் கல்வி அபிவிருத்தியடைந்திருக்கிறது. கல்வி அறிவு 93% ஆக உயர்ந்துள்ளது என்றார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் காமினி லொக்குகே உரையாற்றுகையில்,
என்னை, இந்தப் பிரதேச மக்களாகிய நீங்கள் 1983 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தீர்கள். சமூகத்துக்கு சேவையாற்றுவதற்காக என்னை நீங்கள் தெரிவு செய்தீர்கள். அதனால் இந்தப் பாடசாலை இன்று அபிவிருத்தியடைவதை இட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் பாடசாலை பல கல்விமான்களை உருவாக்கியிருக்கிறது. அது போல இன்னும் பலர் உருவாக வேண்டும்.
கல்வி அமைச்சும் விளையாட்டுத் துறை அமைச்சும் இணைந்து அமைச்சரவையின் அனுமதி பெற்று விளையாட்டுப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தோம்.
விளையாட்டுத் துறைக்கான வளங்கள் இருந்தும் 90% பாடசாலைகளில் எந்தப் பயிற்சியும் வழங்குவதில்லை. அதற்கான ஒரு செயற் திட்டத்தையே தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறோம். இந்தத் திட்டத்திற்கு ஜனாதிபதி 300 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார்.
பெல்லன்வில விகாரையின் நாயக்க தேரர் பேராசிரியர் விமலரதன தேரர் உரையாற்றுகையில், தற்போதைய கல்வி முறையையும் பாடசாலைக் கட்டமைப்பையும் மாற்றியமைக்க வேண்டுமென ஜனாதிபதியிடமும், கல்வி அமைச்சரிடமும் வேண்டுகோள் விடுத்தார். எல்லோரும் வளம் படைத்த சொகுசு பாடசாலையில் பிள்ளைகளைச் சேர்க்கவே விரும்புகிறார்கள். கிராமத்தில் பாடசாலைகளைக் குறைத்து மதிக்கிறார்கள். இதனால் பிள்ளைகளின் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது.
இந்த நிலையை மாற்ற வேண்டும். தற்போதைய முறையின் கீழ் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உள்ளது. கிராமத்தில் கற்று உலகுக்குச் சொல்லும் மார்க்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
யுத்தத்தில் அடைந்த வெற்றியைக் கொண்டாடி ஜனாதிபதிக்குப் பாராட்டு நடத்தியது இனிப்போதும். 30 வருடங்களாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நாம் அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நேற்றைய நிகழ்வில் அமைச்சர்கள், பந்துல பஸ்நாயக்க, பந்துல குணவர்தன, ஜீவன் குமாரதுங்க, பி. தயாரத்ன, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மாகாண அமைச்சர் உபாலி கொடிகார மற்றும் பெருந்திரளான உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள், பிரதேச அரசியல்வாதிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply