பாடசாலை சேவைக்கென ஆயிரம் பஸ்களை ஈடுபடுத்த தீர்மானம்: அமைச்சர் டளஸ்
அடுத்த ஆண்டு இறுதிக்குள் பாடசாலை சேவைக்கென ஆயிரம் பஸ்களை ஈடுபடுத்தத் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து அமைச்சுக்கான 2,299.83 மில்லியன் ரூபா குறைநிரப்புப் பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர், இ. போ. ச. மூலம் மேலும் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்க உரிய சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார். நாட்டின் போக்குவரத்துத் தேவையில் 60 வீதத்தை தனியார் போக்குவரத்து பஸ்களும் 40 வீதத்தை அரச போக்குவரத்தும் வழங்கி வருகின்றது. இந்த வகையில் தற்போது சேவையிலுள்ள இ. போ. ச. பஸ்களுக்கு மேலதிகமாக மேலும் 2,000 பஸ்கள் தேவைப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது :-
கடந்த 30 வருட காலங்களுக்குப் பின் வடக்கு, கிழக்கு இ. போ. ச. டிப்போக்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. வடக்கிற்கான யாழ் தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம் வரை நடத்துவதற்கு இன்னும் ஒரு வருட காலம் எடுக்கும் என்பதால் அதுவரை யாழ்ப்பாணத்துக்கு சொகுசு பஸ் சேவையை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடந்த வரவு செலவுத் திட்டத்தில் இ. போ. ச.வுக்கென 600 மில்லியன் ரூபா நிதியே ஒதுக்கப்பட்டது. பாடசாலை போக்குவரத்து நடவடிக்கைகளினால் மட்டும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வருடாந்தம் 1.5 பில்லியன் ரூபா நட்டமேற்படுகிறது.
2005ம் ஆண்டு வரை பாடசாலை சேவையில் 182 பஸ்களே ஈடுபடுத்தப்பட்டு வந்துள்ளன. அதனைத் தற்போதும் நாம் 552 ஆக அதிகரித்துள்ளதுடன் 2010ம் ஆண்டு இறுதிக்குள் ஆயிரமாக இதனை அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளோம்.
இதன் மூலம், பெற்றோர்கள் பாடசாலை வான்களுக்கு வழங்கும் பெருந்தொகையான பணத்தை மீதப்படுத்த வழி கிட்டும். பாடசாலை மாணவர்களுக்கான பஸ் சேவையை முறையாக மேற்கொள்ளவும் அவர்களுக்கான பருவச்சீட்டு விநியோகம் உள்ளிட்ட செலவுகளை ஈடுசெய்யவென 523 மில்லியன் ரூபாவை குறைநிரப்புப் பிரேரணை மூலம் கோருகிறோம்.
இதேவேளை இ. போ. ச. ஊழியர்களின் கடந்த இரண்டு வருடத்திற்கான வாழ்க்கைச் செலவு நிலுவையை வழங்குவதற்காக 299 மில்லியன் ரூபாவை குறைநிரப்புப் பிரேரணை மூலம் பெறுவதே இ. போ. ச.வின் நோக்கமாகும்.
கடந்த காலங்களில் இ. போ. ச. நட்டத்தில் இயங்கிய போதும் பாடசாலை மாணவர்கள், பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோருக்கான மாதாந்த பிரயாண பருவச்சீட்டுக்கான பெருந்தொகை நட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.
இரவு வேளைகளிலும் விடியற்காலையிலும் பஸ் சேவைகளை நடத்துவதில் மாதம் ஒன்றிற்கு 165 மில்லியன் ரூபா இ. போ. ச.விற்கு நட்ட மேற்படுகிறது. இந்த நிலையிலும் சபை இலங்கையின் எந்த வங்கியிலும் கடனாளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் மக்களுக்கு சிறந்த போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்காக சிறந்த முகாமைத்துவத்தைக் கட்டியெ ழுப்பவும் அதற்கான செலவீனங்களுக்காகவும் 1476 மில்லியன் ரூபாவை குறைநிரப்பு பிரேரணை மூலம் இ. போ. ச. கோருகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply