வவுனியாவில் கட்டப் பஞ்சாயத்து செய்யோரை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை: வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எல்.ஜி.குலரட்ண
வவுனியாவில் ஆயுதக் குழுக்களின் அடாவடித்தனங்களை முற்றாக கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எல்.ஜி.குலரட்ண தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கடந்த வியாழக்கிழமை காலை நடத்திய சந்திப்பிலேயே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இதனைத் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட பொலிஸ் தலைமையகத்தில் நேற்றுக் காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பில் ஈ.பி.டி.பி., சிறீ-ரெலோ, ஈரோஸ், புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் குலரட்ண அங்கு மேலும் கூறுகையில்;
விடுதலைப் புலிகளைச் சாட்டாக வைத்து இனிமேல் எந்தவொரு ஆயுதக்குழுவும் அடாவடித்தனங்களில் இறங்க அனுமதிக்கப்படமாட்டாது. புலிகளுக்கெதிரான நடவடிக்கைக்காக சில தமிழ் அமைப்புகளின் உதவியை அரசும் படைத்தரப்பும் பெற்று வந்தன. தற்போது போர் முடிவடைந்து விட்டதால் இந்தக் குழுக்களது செயற்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
புலிகளைச் சாட்டாக வைத்தும் அவர்களுக்கெதிரான நடவடிக்கை எனக் கூறியும் இந்த ஆயுதக் குழுக்கள் இதுவரை காலமும் பல்வேறு அட்டகாசங்களில் ஈடுபட்டிருந்தன. இனிமேல் இதற்கெல்லாம் இடமளிக்கப்படமாட்டாது.
வவுனியாவில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு இந்தக் குழுக்களின் செயற்பாடுகள் தடையாக இருப்பதற்கு அனுமதிக்க முடியாது. எனவே, எவராவது பகிரங்கமாக ஆயுதங்களுடன் நடமாடினால் அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வவுனியாவில் நீதி, நிர்வாகச் செயற்பாட்டுக்கு இந்த ஆயுதக்குழுக்கள் பெருந்தடையாக இருப்பதாக நீதிபதிகள் எம்மிடம் தெரிவித்துள்ளதுடன், இயல்பு நிலையை ஏற்படுத்த பொலிஸாரின் ஒத்துழைப்பை நாடியுள்ளனர்.
கொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பங்கோரல், சொத்துகள் பறிமுதல், சொத்துகளைச் சூறையாடலென பெருமளவு குற்றச் செயல்கள் குறித்து சில ஆயுதக் குழுக்களுக்கெதிராக பெருமளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
சில மாதங்களுக்கு முன் வவுனியாவில் பிரபல மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் மீரா மொகைதீன் ஆயுதக் குழுவொன்றால் சுட்டுக்கொல்லப்பட்டார்.அது தொடர்பாக ஒரு ஆயுதக் குழுவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் பாடசாலை அதிபர் ஒருவரும் அவருடன் சென்றவரும் ஆயுதக் குழுவொன்றால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களை மிக விரைவில் கண்டு பிடித்து விடுவோம். இந்த விடயத்தில் பொதுமக்கள் எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றனர். தொடர்ந்தும் இவ்வாறான செயல்கள் குறித்து பொதுமக்கள் எம்முடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஆயுதக் குழுக்கள் தத்தமது முகாம்களுக்கு மக்களை அழைத்து பஞ்சாயத்து நடத்துவதையெல்லாம் இனிமேல் நிறுத்திவிட வேண்டும். மக்களும் இனிமேல் அங்கு செல்லத் தேவையில்லை. எதுவென்றாலும் நீதிமன்றம், பொலிஸ் திணைக்களத்தை அணுகித் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்.
நகரசபைத் தேர்தல் பிரசாரமும் வாக்களிப்பும் சுமுகமாக நடைபெறத் தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நண்பகல் 12 மணிவரை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கட்சிப் பிரதிநிதிகளது முறைப்பாடுகளையும் பொலிஸார் பதிவு செய்தனர். பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் சமன்சேகரவும் இதில் கலந்துகொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply