செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவி அவசியம்: பிரித்தானியா
இலங்கையில் நீண்டகாலம் தொடர்ந்துவந்த மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளபோதும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படக்கூடாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் நிலையில் முகம்கொடுக்கப்படும் சவால்களை எதிர்கொள்வதற்கு செஞ்சிலுவைச் சங்கம் அவசியம் எனப் பிரித்தானிய வெளிவிவகார அலுவல்கள் அமைச்சர் லோர்ட் மலோக் பிரவுண் கூறியுள்ளார்.
“செஞ்சிலுவைச் சங்கம் தனது பணிகளைக் குறைத்துக்கொள்ளவேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கைவிடுத்துள்ளமை குறித்து எனக்குத் தெரியும். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் இந்தக் கோரிக்கையை ஏற்றுத் தனது பணிகளைக் குறைப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. மோதல்களுக்குப் பின்னரான நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததொன்று” என அவர் குறிப்பிட்டார்.
மோதல்கள் முடிவடைந்தாலும் நலன்புரி நிலையங்களில் பெரும் எண்ணிக்கையான மக்கள் தங்கவைக்கப்பட்டிருப்பதால் செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என மலோக் பிரவுண் சுட்டிக்காட்டினார்.மனிதநேயத்தைக் கருத்தில்கொண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன், இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டுமெனத் தாம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply