வடக்கின் வசந்தத்துக்கு வவுனியாவை வாசலாக்குவோம்.
எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க தொடங்கிய போராட்டம், ஏகதலைமைத்துவ பாசிசக்கனவால், கால்நூற்றாண்டு காலம் நீண்ட கொடிய யுத்தமானதால் தமிழ் சமூகத்தின் அரசியல் சமூக பொருளாதார அடித்தளங்கள் ஆண்டங்கண்டுள்ளது. அவைகளை நாம் மீள் நிர்மாணம் செய்ய ஜனநாயக வழிகளைத் தவிர வேறொரு வழியும் நம் முன் நடைமுறை சாத்தியமாக இல்லை.
வன்னி பெரும் நிலப்பரப்பு தனது மக்களை இழந்து காட்சி தரும் சோகம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. அந்த மண்ணின் மைந்தர்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பிச் சென்று தங்கள் இயல்பு வாழ்வைத் தொடங்க ஆற்ற வேண்டிய அரசியல் வேலைத் திட்டத்தைத் தவிர சிறீ-ரெலோவாகிய நாம் வேறொன்றையும் முக்கியமான பணியாக சமகாலத்தில் கருதவில்லை.
கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கைத் தீவில் வசிக்கும் அனைத்து இன மக்களின் ஆழ்மனங்களில் புதைத்து போன கசப்பான யுத்த வடுக்களுக்கு எந்த அரசியல் தலைமைத்துவத்தாலும் ஓரிரவில் தீர்வு கண்டுவிட முடியாது. அத்துடன் இவைகளை தனித்தனியாக ஓர் இனக்குழுமத்துக்குள் தீர்த்து வைக்கக்கூடிய வாய்ப்புகள் அறவே இல்லை. தமிழ், முஸ்லிம், மலையக மற்றும் சிங்கள மக்களின் சமூக வாழ்வை சிறுபான்மை அல்லது பெருன்பான்மை என்ற அரசியல் அணுகு முறைகள் மூலமோ, அல்லது பகுப்பதன் மூலமோ மேம்படுத்த முடியாது. அனைத்து இன மக்களின் சமூக நலன்களை இணைக்கும் தேசிய அரசியல் ஒன்றின் மூலமே தமிழ் மக்களின் அரசியல், சமூக அடையாளம் காத்திரமான பங்காற்ற முடியும்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்து நலன்புரி கிராமங்களில் வாழும் மக்கள் மீள் குடியேற்றத்தை விரைவுபடுத்த நடைமுறை சாத்தியமான அரசியல் முன்னெடுப்புகளை விரைவுபடுத்துவோம்.
ஏ-9 நெடுஞ்சாலையை மக்கள் பாவனைக்கு மிக விரைவில் திறந்துவிட அனைத்து அரசியல் வழிமுறைகளையும் முழு மூச்சுடன் செயல்படுத்துவோம்.
வவுனியா நகரை, வன்னிப் பெருநிலப்பரப்பின் கலாச்சார தலைநகராக்க புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம்.
வவுனியா நகரை, இனத்துவ ஐக்கியத்துக்கும் சகவாழ்வுக்குமான சமாதானத்தின் தூதுவராலயம் ஆக்குவோம்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னெடுத்து வரும் வடக்கின் வசந்தத்துக்கு வவுனியாவை வாசலாக்குவோம்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தலிகளில் போட்டியிடும் சிறீ-ரெலோ கட்சி சார்பில் முன்னிறுத்தியிக்கும் வேட்பாளர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்குமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்.
சிறீ-ரெலோ
வவுனியா
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply